தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையடக்க மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கையடக்க மடிக்கணினியை வழங்கி விழாவில் சிறப்பு பேரூரையாற்றினார்.. அப்போது அவர் விழாவில் பேசும் பொழுது, "எப்பொழுது செய்ய வேண்டுமோ அப்பொழுது அந்த காரியம் நீங்கள் சொல்லாமலேயே நாங்கள் அந்த காரியத்தை சரிசெய்வோம். ஆகவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லை, அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகையான ரூபாய் ஆயிரம் கொடுத்து விட்டு நாங்கள் படாத பாடு படுகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மேல் ரூபாய் 1000 வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் விண்ணப்பம் வந்தது 1 கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தது. ஆனால் இதில் இந்த பணத்தை வாங்கிய 1 கோடியே 15 லட்சம் பேர் மூச்சே விடுவதில்லை
ஆனால் கிடைக்காத 4 பேர் உள்ளனர். நாங்கள் ஊருக்கு சென்றால் எங்களை படுத்தும் பாடு பெரும்படாக உள்ளது. நாங்கள் தப்பித்து போனால் போதும் என்ற நிலை உள்ளது. அதோடு பக்கத்தில் வீட்டில் உள்ள பெண்கள் வாங்குகின்றனர். ஏன் நமக்கு வரக்கூடாது என்கின்றனர். அதோடு சில கிராமங்களில் உள்ள பெண்கள் எங்களுக்கும் நீங்கள் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வேண்டும், பக்கத்தில் உள்ளவர்கள் 8 மாதமாக வாங்கி வருகின்றனர். அதையும் சேர்த்து வழங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவிற்கு கிராமப்புற பெண்கள் அட்வான்ஸாக உள்ளனர். தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என கேட்கின்றனர் என்றால் ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள்? சிறிய கல்வி படித்தவர்களே இப்படி இருக்கின்றனர் என்றால் உங்களது கோரிக்கைகளையும் வருங்காலத்தில் முதல்வர் தீர்த்து வைப்பார்” என்று கூறினார்