பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரான இவரை கௌரவப்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன்  நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என பெயர் சூட்டினார். பின்நாளில் ஏற்பட்ட ஜாதி கலவரம் காரணமாக சமுதாயத் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனினும்  நெல்லை மாவட்ட மக்களிடம்  வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கட்டபொம்மன் கம்பீரமாக கையில் வாளுடன் காட்சி அளிக்கும் முழு உருவ சிலை அமைக்கப்பட்டிருந்தது.


50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிலை அங்கு  இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிலையை காணவில்லை. வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சிலை வேறு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கலாம் என்ன மக்கள் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து தற்போது அந்த கட்டிடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் அதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலை மீண்டும் இடம்பெறவில்லை. மாறாக சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பம் கட்ட மறுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி முடிவில் தூக்கு கயிற்றுக்கு தனது உயிரை பறி கொடுத்த வீர வரலாறு கொண்ட கட்டபொம்மன் சிலை அப்புறப்படுத்தப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. 







  
இந்த நிலையில் விடுதலை களம் கட்சி சார்பில் அதன் தலைவர் நாகராஜ் தமிழக முதலமைச்சருக்கு தனி பிரிவிற்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் உடனடியாக கட்டபொம்மன் சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் கொண்டு வைக்கப்பட வேண்டும் இல்லை எனில் வரும் 29ஆம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு அருங்காட்சியகத்தில் உள்ள சிலை மீண்டும் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிறுவப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.