நெல்லை மாவட்டம்  முக்கூடலில் பிரியாணி பார்சல் கேட்டு தகராறு செய்து ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, இரண்டாவது நாளாக வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல்- ஆலங்குளம் ரோட்டில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் 4 நபர்கள் பிரியாணி பார்சல் கேட்டனர். அப்போது பார்சல் வழங்க தாமதமானதாக கூறி, அந்த 4  நபர்களும் சேர்ந்து ஓட்டலை சூறையாடினர்.


பிரியாணி பார்சல் தர தாமதமானதால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு- 2ஆவது நாளாக தொடரும் கடையடைப்பு








மேலும் ஓட்டல் ஊழியரான முக்கூடல் சிங்கம்பாறையைச் சேர்ந்த சகாய பிரவீனை (24) அரிவாளால் வெட்டி விட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த சகாய பிரவீனுக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஓட்டலை சூறையாடி, ஊழியரை அரிவாளால் வெவட்டிய கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி, முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று காலையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து, முக்கூடல் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

சிங்கம்பாறை, சடையப்பபுரம் பகுதிகளிலும் வியாபாரிகள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் பங்கேற்றனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநகர தலைவர் குணசேகரன் மாநில செயலாளர் விநாயகம்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் முக்கூடல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.  இதையடுத்து மதியம் போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர். பின்னர் கடைகள் திறக்கப்பட்டன.

 

இதற்கிடையே ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக அரியநாயகிபுரத்தை சேர்ந்த பொன்னுக்குட்டி மகன் கார்த்திக் கண்ணன் (20) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் பத்திரகாளி, ஆதிகணேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். பிரியாணி பார்சல் தர தாமதம் செய்ததால் கடைகளை சூறையாடி கடையில் வேலை செய்யும் நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.