தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கழுகுமலையில் வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் ஆகிவை அமைந்துள்ளன. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை.
விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்களால் 8 ஆம் நூற்றாண்டில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களை நேரில் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 27 ஆண்டுகளில் இரண்டு முறை நிதி ஒதுக்கி அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வர மறுப்பது சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கழுகுமலைக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாபயணிகள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில் பல கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை அறிவித்து திமுக, அதிமுக செயல்படுத்தின. சமீபத்தில் கூட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அமைச்சர்கீதாஜீவன் தொடங்கிவைத்தார். அரசுகள் இவ்வளவு நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கழுகுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன.
கழுகுமலை பேரூராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 1994ஆம் ஆண்டு 25 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பின்னர் செயல்படமால் போனது. இதையெடுத்து 2013ஆம் 8.50 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தாலும் அவை இதுவரை காட்சி பொருளாக மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேலக்கேட் என்று அழைக்கப்படும் கோவில்பட்டி-சங்கரன்கோவில் மெயின் சாலையில் பயணிகளை ஏற்றி இறங்கி செல்கின்றனர். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு பஸ் நிலையம் இருக்க சாலையில் பயணிகளை சாலையிலேயே ஏற்றி, இறங்கி பேருந்துகள் செல்வதால் பொது மக்கள் வெயில், மழை எல்லா காலங்களில் பெரும் அவதிப்பட்டு தான் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி கழுகாசலமூர்த்தி திருக்கோவிலுக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லது பஸ் நிலையத்தினை சுற்றி நகர் பகுதி வளர்ச்சி அடைந்துள்ளதால் அப்பகுதி மக்களும் போக்குவரத்திற்காக 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிலும் குறிப்பாக மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள், இரவு நேரங்களில் அப்பகுதியில் பெண்கள் நடந்து வருவதற்கு சிரமப்படுகின்றனர். பல லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட பேருந்து நிலையம் இருந்தும் இல்லாத போன்றது காணப்படுகிறது. பஸ்கள் உள்ளே வரவில்லை என்பதால் பேரூராட்சி நிர்வாகம் பரமரிப்பு பணிகள் செய்யமால் மேற்கொள்வில்லை. இதனால் பேருந்து நிலையம் சிதலமடையும் நிலை உருவாகி உள்ளது.
கழுகாசலமூர்த்தி திருக்கோவில், வெட்டுவான்கோவில், சமணர் பள்ளி என அனைத்துமே பேருந்து நிலையத்தினை சுற்றி அருகில் தான் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்தால் பக்தர்கள், சுற்றுலாபயணிகள் எளிதில் அங்கு சென்று விடலாம். ஆனால் பேருந்துகள் உள்ளே வரவில்லை என்பதால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை என 3 துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் கேட்ட போது, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறையிடம் உதவி கேட்டு இருப்பதாகவும், விரைவில் பஸ்கள் உள்ளே வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு பல கோடி ரூபாய் செலவில் கழுகுமலை சுற்றுலாவினை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் 27 ஆண்டுகளாக செயல்படமால் இருக்கும் பேருந்து நிலையத்தினை செயல்படுத்த எதிர்பார்த்து உள்ளூர் மக்களும் கழுகுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் காத்திருக்கின்றனர்.