தூத்துக்குடி மாவட்டம் கொற்கை பகுதியில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கொற்கை பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணிகளை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வு நடைபெற்ற இடங்கள், குழிகளை பார்வையிட்ட அவர், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும்போது,தமிழக தொல்லியல் ஆய்வுகளில் கொற்கை அகழாய்வு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பண்டைய காலத்தில் இருந்து பாண்டியர்களின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கையில் 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்ட அகழாய்வுகள் நடைபெற்றாலும் தற்போது நடைபெற்றுள்ள அகழாய்வு பல முக்கிய பொருட்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த அகழாய்வு மூலம் கொற்கைக்கும் ரோமானியம், எகிப்து, சீனா போன்ற நாடுகளுடன் இருந்த தொடர்புகளை விளக்கக்கூடிய பல பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கங்கை சமவெளியை சார்ந்த கறுப்பு பளபளப்பான பானை ஓடுகள் இங்கே கிடைத்திருப்பது மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. பல பண்பாட்டு அடுக்குகளை பார்க்கும் போது இந்த பகுதி எவ்வாறு செழித்து இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
கிறிஸ்து பிறப்பதற்கு 785 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நாகரீகம் நிலவி வந்திருக்கிறது என்பது ஏற்கனவே இங்கு நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரியவந்தது. தொடர்ந்து தற்போது நடைபெற்ற அகழாய்விலும் பல கட்டுமானங்கள், வடி குழாய்கள், சுடுமண் ஓடுகள், சங்கு வளையல்கள், சங்கு பொருட்கள், இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள், காசுகள், தமிழீ எழுத்துக்கள், பானை ஓடுகள் என பல பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைக்கால தமிழின வரலாற்றில் முக்கிய இடமாக உள்ள கொற்கையில் இந்த அகழாய்வு புது வெளிச்சத்தை பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.
கொற்கையில் கடல்சார் அகழாய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். கடல்சார் அகழாய்வுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் தேவையாக இருக்கிறது. அதற்கான ஆய்வுகளும், ஆலோசனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. வல்லநுநர்களோடு தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர். அதனை இறுதி செய்த பிறகு, தொழில்நுட்ப வசதிகள் குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டிய பிறகு நிச்சயமாக இங்கே கடல்சார்ந்த ஆய்வுகள் தொடங்கப்படும்.நெல்லையில் அமையவுள்ள பொருநை நாகரீகம் அருங்காட்சியகத்தில் கொற்கை முக்கிய இடம் பெறும். இங்கே கள அருங்காட்சியம் அமைப்பது குறித்து பின்னர் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். கொற்கையில் அகழாய்வு நடைபெறும் பகுதிகளில் தற்போதைய குடியிருப்புகள் உள்ளன. எனவே இங்கே சில சிரமங்கள் இருக்கின்றன. அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கொற்கையில் அதிக இடங்களில் அகழாய்வு செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இங்கே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் சிரமங்கள் உள்ளன. இங்கு அகழாய்வு செய்ய கூடுதல் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அமைச்சர்.
தொடர்ந்து மாலையில் சிவகளை பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணிகளைஅமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், அகழாய்வு கள இயக்குநர் தங்கத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை முன்னிட்டு சிவகளையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 3200 ஆண்டுகள் பழமையான நெல்மணிகள் இருந்த முதுமக்கள் தாழிகள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவைகள் கிராம மக்கள், மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சிவகளை வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம், தொல்லியல் துறை பணியாளர் சுதாகர் ஆகியோர் பழங்கால பொருட்கள் குறித்து பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.