99 ஆண்டுகள் தனியார் குத்தகை முடிந்து வருகின்ற 2028 ஆம் ஆண்டு தமிழக அரசின் வனத்துறை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அதை சார்ந்த மலை காடுகளை மீண்டும் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது. அதன் செயல்முறைகள் நடைபெற்று வருகிறது. தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வினை வழங்கி அவர்கள் மலைப்பகுதியில் இருந்து காலி செய்யுமாறு கூறி வருகிறது. தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை முடிவு செய்த பிறகுதான் அவர்களை மாஞ்சோலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது தொழிலாளர்கள் மாஞ்சோலையில் தங்கி உள்ளனர். மேலும் தமிழக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைக்காக அவர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் தமிழ்நாடு தேயிலை கழகமான டேன் டீ நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஐந்து தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு டெய்லி தோட்ட கழகம் எடுத்து நடத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் எனவும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட திட்டத்தை முதன்முதலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கோத்தகிரி கூடலூர் ஆகிய பகுதிகளிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை போன்ற பகுதிகளிலும் செயல்படுத்தியது.  பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்த திட்டம் கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் என மறு பயிரிடப்பட்டு 454 ஹெக்டேர் நில பரப்பளப்பில் சுமார் 4000 தொழிலாளர்களுடன் ஆறு நவீன தொழிற்சாலைகளுடன் செயல்பட்டு வருகிறது, இதனை குறிப்பிட்டு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக உருவான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திடம்  மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து குதிரைவெட்டி ஆகிய ஐந்து இடங்களில் உள்ள தேயிலை தோட்டங்களையும் வனத்துறை ஒப்படைக்கும் பட்சத்தில் தேயிலை தோட்டங்களுக்கும் 700 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.


எனவே இந்த ஐந்து இடங்களில் தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திடம் ஒப்படைப்பு செய்து தேயிலைத் தோட்டங்களை மற்றும் 700 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணப்பம் ஒன்றை அனுப்பி இருந்தார். இதற்கு தமிழ்நாடு தேயிலை தோட்டத்தின் நிர்வாக இயக்குனர் அளித்துள்ள பதிலில், முத்துராமன் மனுவில் குறிப்பிட்டுள்ள தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்துவது என்ற கோரிக்கை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் மூலம் தமிழக அரசு ஒன்றுதான் இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு அறிவுறுத்த முடியும் என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.