நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலை கிராமத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்ற நினைக்கும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஆறு தலைமுறைகளாக 1929 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தாங்களாகவே முன்வந்து விருப்பம் ஓய்வு பெறுவதாகவும், 15 -6 -2024 முதல் பணி நிறைவு பெற்றுவிட்டதாகவும், ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அவர்கள் அங்கு வசிக்கும் வீடுகளை காலி செய்து வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த குற்றத்திற்காக நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மேலாளரை கைது செய்ய வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர் நல ஆணையம் மௌனம் சாதித்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட நிறுவனம் வலுக்கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க சென்றால் மனு அளிக்க வந்த நபரை தனிமைப்படுத்தி மாவட்ட ஆட்சியர் மிரட்டி உள்ளார். சுமுகமாக பேசி முடிக்க வேண்டிய செயலை சிக்கலில் இழுத்து விடும் செயலாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் தேயிலைத் தோட்ட நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் சுமுகமாக தீர்வு காணும் மனநிலையில் ஆட்சியர் இல்லை. தமிழக முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியரை மாற்றவும் முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேயிலை பறிக்கும் தொழிலை தவிர்த்து வேறு எந்த தொழிலும் தெரியாத அங்குள்ள மக்கள் அங்குள்ள சீதோசன நிலைக்கு ஏற்றவாறு வாழ்ந்துள்ளனர். எக்காரணத்தை கொண்டும் அவர்களை கீழே இறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது.
கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற்றவர்களின் ஆணைகளை தொழிலாளர் நலத்துறை தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். மாஞ்சோலை காப்பு காட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காலி செய்ய சொல்கிறோம் என்பது வார்த்தை ஜாலம் மட்டுமே. 99 ஆண்டுகளாக மாஞ்சோலை மக்கள் காடுகளையும், வன செல்வங்களையும் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் மீது காடுகளை அழித்ததாக ஒரு வழக்கு கூட கிடையாது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்க கூடாது என கோரிக்கை வைத்து வரும் 6- ந் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 99 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய போது திமுக ஆட்சியில் இருந்த சூழலில் நீதி கிடைக்காததை போல் தற்போது நீதி கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஊதியம் இல்லாமல் தற்போது மாஞ்சோலை பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு பட்டினி சாவு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் தான் முழு பொறுப்பு. மாஞ்சோலை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக சென்றவர்கள் யாரும் தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் செயல்படவில்லை" என அவர் தெரிவித்தார்.