நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பனையங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இடைகால், பாரதிநகர், குமாரசாமிபுரம், செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் நெல்லை மற்றும் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்காக சென்று வருகின்றனர்.  ஆனால் இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி அப்பகுதியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 4 கிலோ மீட்டர் வரை தங்களது புத்தகங்களை சுமந்து சென்று பேருந்துகளை பிடிக்கும் அவல நிலை இருப்பதாக  அப்பகுதி மாணவ, மாணவியர்  தெரிவித்தனர்.


மேலும் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்ப பல மணி நேரம் வரை ஆகிறது. இதன் காரணமாக தங்களது படிப்புக்கான எந்த ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியும், தங்கள் பகுதியில் இருந்து தேவையான பேருந்துகளை பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் இயக்க வலியுறுத்தியும்  அக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் கடந்த திங்கள் கிழமையன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி சீருடையுடன் வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ஆட்சியரிடம் இது தொடர்பாக மூன்று முறை மனு அளித்தும் எந்த வித  நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் தங்களது கோரிக்கைகளை இம்முறையாவது நிறைவேற்றி தருவதோடு தங்களது படிப்பு தடைபடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.




இந்த நிலையில் இது குறித்தும் மாணவ, மாணவியர் சந்திக்கும் துயரங்கள் குறித்தும் ஏபிபியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று 03.07.24 முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பனையங்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. கிராமத்திற்கு வந்த பேருந்தை கண்டு மாணவ,மாணவியர் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இது குறித்து அக்கிராம மாணவிகள் கூறும் பொழுது, இதற்கு முன்னர் பேருந்து வசதி இல்லாமல் நடந்தும், சைக்கிளிலும் பேருந்திற்காக நீண்ட தூரம் சென்று வந்தோம்.


ஆனால் தற்போது எங்கள் கிராமத்திற்குள் பேருந்து வந்து செல்லும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பள்ளி, கல்லூரி செல்ல முடிகிறது. எனவே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த போக்குவரத்து நிர்வாகத்திற்கும் அரசுக்கும் நன்றி என தெரிவித்தனர். அதே போல பனையங்குறிச்சி கிராமத்திற்கு மட்டும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. துரைசாமி புரம் மற்றும் செங்குளம் வழுதூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனையும் மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.