நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம்1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது. இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.
எனவே நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது முதலே மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பல தலைமுறையாக வசித்து வரும் மக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில் மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்தி வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது போன்ற நிலையில் முன்னாள் தமிழ்நாடு சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார்,
தொடர்ந்து இதுகுறித்து ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தை போன்று நெல்லையிலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலையில் 100 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறையாக தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களை அங்கே இருந்து வெளியேற்றினால் எங்கே போவோம் என்று பயப்படுகின்றனர். வீடுகள், கல்விக்கூடங்கள், ரேஷன் கடைகள், தபால் நிலையங்கள், அரசின் 5 வார்டுகள் கூட அங்கு உள்ளது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றினால் அந்த வார்டுகளையே கலைக்க வேண்டிய நிலை வரும். அது போன்ற சூழல் ஏற்படக்கூடாது. அங்குள்ளவர்களின் வேலை வாய்ப்பு என்பது அங்கே தான் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கீழே சொந்தமாக இடம் எதுவும் கிடையாது, வேறு வேலையும் பார்க்க தெரியாது எனவே தொழிலாளர்களை வெளியேற்றாமல் தமிழக அரசே மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். முதல்வருக்கு பரிந்துரை செய்து அதன்படி முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என்று கூறினார்.