நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் ஒட்டுமொத்த தமிழக அரசியலிலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.பி.சி.ஐ.டி. விசாரணை:


காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சூழலில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. காவல்துறை விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக  Cbcid காவல் ஆய்வாளர் உலகராணி நியமனம்  செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.


குறிப்பாக கடந்த 23 ஆம் தேதியே ஜெயக்குமார் மரணம் தொடர்பான கோப்புகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட Cbcid காவல் ஆய்வாளர் உலகராணி இன்று  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 02/2024 என FIR பதிவு செய்து உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளார்.


நேரடி விசாரணை:


முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஜெயக்குமார் உடல் கிடைக்கப்பெற்ற அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள இடத்தில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் சனிக்கிழமையன்று மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தலின் ஆகியோரிடம் தனித்தனியாக சிபிசிஐடி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.


சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற்ற விசாரணையில், துருவி துருவி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் அளித்த வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.  இந்த நிலையில் இன்று திசையன்விளையில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.




ஜெயக்குமார் மரண வழக்கு:


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே மாதம் 2ம் தேதி இரவில் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் அவரை காணவில்லை என அவரது மகன் மறுநாள் 03.05.24 அன்று உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மே 4ம் தேதி ஜெயக்குமாரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக ஜெயக்குமார் உடல் மீட்க்கப்பட்டது. அன்று மாலையே உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டது. 5ம் தேதி ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரான கரை சுத்துபுதூரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பாக 10 DSP க்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து  நெல்லை மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உட்பட 35க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜெயக்குமாரின் உறவினர்கள், மகன்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் இறுதியாக கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கிய வீடியோ, மேலும் கிடைக்கப்பெற்ற பல்வேறு தடயங்களை என அனைத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 


விடை தெரியாத கேள்விகள்:


இருப்பினும் தற்போது வரை துப்பு துலங்காத நிலையில் காவல்துறையினர் அடுத்தடுத்த நகர்வுகளில் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையை துவக்கிய காவல்துறையினர் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்களையும், விடை தெரியாத கேள்விகளையும் வைத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது,




சிபிசிஐடி 30 பேருக்கு சம்மன்:


இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு எஸ்பி முத்தரசி தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக கிடைக்கப்பெற்ற இரண்டு கடிதங்களின் அடிப்படையில், தனக்கு பணம் தர வேண்டிய நபர்களிடமிருந்து மிரட்டல் வருவதாக கூறி சுமார் 30 பேரின் பெயரை அதில் குறிப்பிட்டு மரண வாக்குமூலமாக  எழுதியது  வெளியானது.  அதில் முன்னாள் காங்கிரஸ் லைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சபாநாயகர் அப்பாவு என முக்கிய தலைவர்கள் பலரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.


இது தொடர்பாகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இதில் தொடர்புடைய 30 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.  அதன்படி சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடிதத்தில் எழுதியிருந்த அனைவரிடத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் சபாநாயகர் அப்பாவுவிடம் விசாரணை  நடத்தவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரிடமும் விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு தயாராக இருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.