நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ளது  மணிமுத்தாறு  அருவி. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகவும் மணிமுத்தாறு அருவி உள்ளது. குறிப்பாக இந்த அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை புரிவார்கள்..  மேலும் இந்த அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. வெள்ளத்தில் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமாகின. எனவே அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக ஆண்கள் பெண்களுக்கு தனி தனி தடுப்பு கம்பிகள், தரையில் காங்கீரிட் பணி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் அருவி கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டது.


இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், கோடை வெயிலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதியளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்லும் சூழல் இருந்தது.  அதே நேரம் அருகில் உள்ள குற்றாலம் போன்ற பிற அருவிகளில் கோடை காரணமாக தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. ஆனால் மணிமுத்தாறு அருவியில் கோடை காலத்திலும் மிதமான தண்ணீர் வரும். எனவே  மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் குளிக்க உடனே அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. 


இந்த நிலையில் வனத்துறை சார்பில் இன்று அறிவிப்பானது வெளியானது. அதில் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப்பகுதியான மணிமுத்தாறு அருவிப்பகுதியில் டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது. பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 26.04.24 நாளை முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வனவிதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.