பானைகள் முதல் பகடைக்காய் வரை… மலையடிப்பட்டி அகழாய்வில் வெளிச்சத்துக்கு வந்த சங்ககால வாழ்க்கை!
தமிழரின் பெருமை
தமிழகத்தில் கீழடி அகழாய்விற்கு பின் தொல்லியல் குறித்து பொதுமக்களுக்கு அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொல்லியல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழரின் பெருமையை பறை சாற்றும் விதமாக அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியூர் பயணிகளும் தமிழரின் பெருமையை அறிந்து செல்கின்றனர்.
மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள்
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி தொல்லியல் தளத்தில் கடந்த மூன்று மாதங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண் தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மற்றும் சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்க மணி, செவ்வக பகடைக்காய், இரும்புப் பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் என 100-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சங்ககால சதுர வடிவ செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் உள்ளிட்டவையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
ஆபரணங்கள் மற்றும் சங்கு வளையல்கள்
சங்ககாலத்தில் இரும்புக் கருவிகள் தயாரிப்பு, ஆபரணங்கள் மற்றும் சங்கு வளையல்கள் தயாரித்தல், நெசவுத் தொழில் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றதற்கான கட்டமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் தமிழர்களின் தொன்மை மற்றும் பழமையான தொழில்நுட்பங்கள் குறித்த மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
