இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை வந்த  அமைச்சர் சேகர்பாபு சிவராத்திரி விழாவை மிக சிறப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் விழா நடத்துவதற்காக பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானம், திம்மராஜபுரம் பெருமாள்கோவில் பகுதியில் உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,  "கடந்த ஆண்டு நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் 5 திருக்கோவில்களில் மகா சிவராத்திரி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை அருணாசலஈஸ்வரர் திருக்கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கோவை பட்டீஸ்வரன் திருக்கோவில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் என 5 இடங்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள்  கூடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்ய பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிவராத்திரியை கொண்டாடும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஆன்மீக பட்டிமன்றங்கள் ஆன்மீகம் சார்ந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நெல்லை பாளையங்கோட்டை  ஆயிரத்து அம்மன் கோவில் எருமை கடா மைதானத்தில் வைத்து சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஸ்டால்கள் அமைக்கப்படும். அந்த கோவிலின் பிரசாதங்கள், வரலாற்று புத்தகங்கள், முதல்வரால் அண்மையில் வெளியிடப்பட்ட 108 புதுப்பிக்கப்பட்ட திருக்கோவில் புத்தகங்கள், 13 போற்றி புத்தகங்கள், திருக்கோவிலின் பழைய வரலாற்றை விளக்குகின்ற இசைக்கருவிகள் போன்றவை இடம் பெற உள்ளது. 


நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு இனிய சிவராத்திரியாக அமைவதற்கு அடிப்படை வசதிகளான கழிவு நீர் வசதி,  குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக  நேரடி கள ஆய்வு செய்ய வந்துள்ளோம். எனவே மகா சிவராத்திரி சிறப்பான  முறையில் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டம் முழுக்க இருக்கும் சிவ பக்தர்கள் பங்கேற்பதற்காக ஒரே இடத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடை, ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் நிகழ்ச்சிகளை காண இவ்வளவு பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என  தெரிவித்தார்.


.