தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் உள்ளது தருவைகுளம். இங்கு பிரதானமாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது தருவைகுளம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கடல்  அரிப்பில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 




தூத்துக்குடி  அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் நாட்டுபடகு மற்றும் விசைப்படகு  மீனவர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடல் தொழில் செய்து  வருகின்றனர். அதிக கடல் நிலப்பரப்பை கொண்ட இந்த பகுதியில்  நீண்ட நாட்களாக கடல் அரிப்பு உள்ளது. கடற்கரையில் நிலப்பரப்பில் கடந்த 3 மாத காலத்தில் 200 மீட்டர் தொலைவு வரை கடல் அரிப்பு  ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




தற்போது கடற்கரையை தாண்டியுள்ள போட்யார்டு எனப்படும் படகுகள் பழுது நீக்கும் பகுதி, மீன் ஏலக்கூடம், மீன் உலர்த்தும் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக நிலப்பரப்பு அரிப்பு ஏற்பட்டு கட்டிடங்கள் அதிகமாக பாதிப்படைந்து உள்ளன. கடல் அரிப்பு தொடர்பாக தருவைகுளம் மீனவர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.




மேலும்,  கடல்  அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கைகள்  எடுக்கப்படவில்லை. எனவே தருவைகுளம் பகுதியில் கடல்  அரிப்பை தடுக்க காலம் கடத்தாமல் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விரைவில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டும் என்று தருவைகுளம் பகுதி  மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.