தமிழகத்தில் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப் 19 ஆம் தேதி நடந்து முடிந்தது.  இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்ததந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதோடு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள், போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததாக செய்திகள் வெளியானது. அந்த வகையில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகள் அடங்கிய தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையம் கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் நடைபெற உள்ளது. 


குறிப்பாக தென்காசி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்புடன் முத்திரையிடப்பட்ட பாதுகாப்பு அறையில் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுமார் 3.45 மணி அளவில் அங்கு பொருத்தப்பட்டிருந்த 73 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்தது. உடனடியாக தகவலறிந்த மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கமல்கிஷோர் தொழில் நுட்ப வல்லுநர்களை வரவழைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றிலும் செயலிழந்த கேமராக்களை சரிசெய்ய தொடங்கினர். தொடர்ச்சியாக மாலை 6.30 மணி வரை செயலிழந்த கேமராக்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனைத்தும் சரி பார்க்கப்பட்டு இயங்க தொடங்கியது. இதன் காரணமாக சுமார் மூன்று மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.


இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது பழுதடைந்து சரிசெய்யப்பட்டது.. குறிப்பாக ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரோடு தொகுதியில்  குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்காள் இயங்கவில்லை என புகார் வெளியானது. அதன்பின்னர்  தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து சரி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டது.


மேலும் கடந்த 27 ஆம் தேதி நீலகிரி தொகுதி வாக்கு பெட்டிகள் வைக்கபட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 173 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது.  26 நிமிடங்களுக்கு பின் தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கூலரஸ் கொண்டு சரிசெய்யபட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா கூறும் பொழுது, அதிக வெப்பம் மற்றும் போதிய காற்று வசதி இல்லாத காரணத்தால் கேமராக்கள் செயலிழந்ததாகவும், பின்னர் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கோடைவெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அதன் பிடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள  மக்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி படையெத்து செல்வதுண்டு. இந்த நிலையில் வெப்பத்தின் காரணமாக சிசிடிவி கேமராக்களே செயலிழக்கும் நிலை வெயிலின் தாக்கத்தை உணர்த்தி வருகிறது. வெப்பத்தின் காரணமாகவும், இடி மின்னலின் காரணமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.