இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற தேடுதலை கண்டறிய மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவானது காலை (ஜூன் 4ம் தேதி) 8 மணி முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கையில் இதுவரை மத்தியில் பாஜகவும், காங்கிரஸுக்கும் இடையே போட்டாபோட்டி நடைபெற்று வருகிறது. மத்தியில் இப்படி என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஒரு தலைபட்சமாகவே முன்னிலை நிலவரங்கள் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 38 இடங்களில் முன்னிலையில் இருந்தாலும், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பாஜக ஒரு சில இடங்களில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில், திருநெல்வேலியும் ஒரு தொகுதி.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் எப்படியும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார்.
இந்தநிலையில் பின்னடைவை சந்தித்துள்ள நயினார் நாகேந்திரன், நெல்லை தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் வரவேற்கிறேன், மக்கள் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பின்னடைவு :
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்தியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நெல்லை தொகுதியில் ஆறு சுற்று முடிவுகள் வெளியான நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகிறார். சராசரியாக சுமார் 30000 வாக்குகள் அதிகம் பெற்று ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார்.
அதேசமயம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”இதுவரை வெளியான முடிவில் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். இனி முடிவுகள் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் போட்ட ஓட்டு. முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.