தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்களும், நகராட்சியில் 81 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சியில் 273 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 414 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



மாநகராட்சியில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 388 வாக்காளர்களும், நகராட்சிகளில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 363 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 484 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 207 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 934 பெண் வாக்காளர்களும், 94 திருநங்கைகளும் ஆக மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 235 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 762 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 7 ஆயிரத்து 200 பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளன.



மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களும் முதல் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு 922 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் சுழற்சி முறையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதியில் 12 பறக்கும் படைகளும், நகராட்சிகளில் 9 பறக்கும் படையும், பேரூராட்சி பகுதிகளில் 24 பறக்கும் படைகளும் ஆக மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.



தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. அதன்படி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி பகுதிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிக்கு அருகில் உள்ள பகுதிகளில் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. இந்த பகுதிகளில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் படி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்களையும், பேனர்களையும் மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். தொடர்ந்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சரின் படங்கள் அகற்றப்பட்டன. பல்வேறு திட்டங்களில் இருந்த தலைவர்களின் படங்களும் மூடப்பட்டன. அதே போன்று போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளும் தலா 10 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, 6 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட முகம்மது சாலிபுரத்தைச் சேர்ந்த முகம்மது பாபு மகள் தன்வீர் சமீனா என்ற இளம்பெண் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்பு மனுவை உதவி தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்பு மனுவை அளித்தார்.  இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் கூறும்போது, படிக்கின்ற காலத்தில் அதிக அளவில் எங்களது பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன். தற்போது நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் பொது மக்களுக்காக சேவை செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஆகவே எனது தந்தையார் அறிவுரைப்படி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். என்னை போன்று பல கல்லூரி மாணவிகள் இதுபோல் பொது மக்களுக்கு சேவை செய்ய வர வேண்டும் அதுவே என்னுடைய நோக்கமாகும் என்று தெரிவித்தார்