தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீச்ரோடு பகுதியில் உள்ள கால்டுவேல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற பெற்றோர் - மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில், “இந்த பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு திட்டம் என்பது சமுதாய மாற்றத்திற்கான ஒரு விதையாகும், தற்போதுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தங்களது வருங்காலத்தை தொலைத்துவிடுகின்றனர். அவ்வாறு இளஞ்சிறார்கள் செய்வது சட்டத்தின்படி குற்ற செயலானாலும், குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்று எச்சரிக்கை செய்து அவர்களுக்கு நல்வழி படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும், மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி முழுமை பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான விஷயம், பள்ளிகளில் கல்வியோடு ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் தவறுகள் செய்வது குறையும். இந்த 16, 17 வயது முழுமையான பக்குவமடைந்த வயதல்ல. இந்த வயதில் இளஞ்சிறார்கள் குற்றங்கள் தவறுகள் செய்வதை தடுத்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமுதாயத்திற்கு உள்ளது.
காவல்துறையில் இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையே பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையின் மூலமாக மாவட்டம் வாரியாக பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 205 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அதில் இன்று கல்வியை இடை நிறுத்திய 60 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியதுவத்தையும், மாணவர்களை நல்வழிப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
கல்வி பயிலுவதற்கு பொருளாதாரம் ஒரு போதும் தடையாக இருக்க கூடாது. அரசு பள்ளிகளில் பயின்று சமுதாயத்தில் சாதனையாளர்களாக மாறியவர்கள் நிறைய பேர். ஆகவே பொருளாதாரத்தை தடையாக நினைக்காமல், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் கல்வியையும் கற்று கொடுத்து அவர்கள் தவறு செய்தால் அது தவறு என்று சுட்டிகாட்டி அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். அவர்கள் தவறு செய்து குற்ற வழக்கு பதிவு செய்யபட்டுவிட்டால் அவர்கள் எந்த ஒரு அரசு வேலைக்கோ, வெளிநாட்டு வேலைக்கு செல்வது மற்றும் தனியார் வேலைக்கு கூட செல்வதற்கு தடை ஏற்படும். உங்கள் குழந்தைகளுக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று உறவுகளை சொல்லி கொடுத்து வளருங்கள், எனது பெற்றோரும் எனது ஆசிரியரும் அன்று என்னை கண்டித்து வளர்த்ததனால் தான் இன்று நான் உங்கள் முன்னிலையில் காவல் கண்காணிப்பாளராக வந்துள்ளேன். விளையாட்டுகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும் அதேபோல நமது வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்கமுடியும். குழந்தைகளுக்கு அனைவரிடமும் நன்றி சொல்வதற்கும், தவறுகளை திருத்தி கொள்ளுவதற்காக மன்னிப்பு கேட்பதற்கும் கற்று கொடுங்கள். கோபத்தை கட்டுபடுத்தி கொள்ள பழக்குங்கள். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படி தீர்வு காணுங்கள்.
உங்கள் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் உயர் பதவியில் அமர வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளுக்கு கற்று கொடுத்து வளருங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னால் முடியும் என்ற எண்ணத்தை வளர்க்க சொல்லி கொடுங்கள். முடியும் என்ற எண்ணமே வாழ்க்கையில் சாதித்து காட்ட உதவும். ஓவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும், அதை பெற்றோர்கள் கண்டுபிடித்து ஊக்கப்படுத்துங்கள். எதிலும் விட்டுக்கொடுக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 2405 இடங்களில் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுமார் 71,000 பொதுமக்கள் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதற்கு உறுதிமொழி ஏற்றுள்ளனர். அதேபோன்று பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். நம் குழந்தைகளை நல்வழிப்படுத்தி நாம் பேணி பாதுகாப்பதன் மூலம் நம் சமூகத்தை நாம் பேணி பாதுகாப்போம். மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்று நல்ல வழியில் சென்று சமுதாயத்தில் வருங்காலத்தில் சாதனையாளர்களாக ஆகவேண்டும்” என்று கூறி தனது விழிப்புணர்வு உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி செல்லா மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்வில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு,பொன்னரசு, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. தமிழ்செல்வி, கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு. ஸ்டேன்ஸி வேதமாணிக்கம், தலைமையாசிரியர் திரு. ஜேக்கப் மனோகர், ‘பள்ளி செல்லா குழந்தைகள்” மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கூடலிங்கம் மற்றும் பெற்றோர், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.