நெல்லை மாவட்டத்தில் கடந்த டிச 17 மற்றும் 18- ந்தேதி ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள சேதங்களை பார்வையிட்ட நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவரணம் வழங்கப்படும் என அறிவித்தார். 


வெள்ள நிவாரணம்:


இதனையடுத்து  மாவட்டத்தில் கடுமையாக பெருமழையால்  பாதிப்படைந்துள்ள தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய 4 வட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதிக பாதிப்படைந்த வருவாய் கிராமங்கள்  வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூபாய் 6000/- வீதமும்,  மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூபாய் 1000/- வீதமும் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது,


நாளையே கடைசி வாய்ப்பு:


நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை 92 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  இதில் டோக்கன் பெறாத காரணத்தாலோ, டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாத காரணத்தாலோ, டோக்கன் தவறிவிட்டதனாலோ நிவாரண  நிதியை இதுவரை பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக 03.01.24  நிவாரணத்தொகை நாளை மாலை (03.01.24) 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 04.01.24 முதல் பொது வினியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணிகள்  நியாய விலைக்கடைகளில் தொடங்கப்படவுள்ளது. பொங்கள் பண்டிகை வர இருக்கும் காரணத்தால் அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது. எனவே கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால் இதுவரை நிவாரண நிதி பெற தவறவிட்டவர்கள் கடைசி நாளான நாளை (03.01.24) க்குள் தவறாமல் நிவாரண  தொகையை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 


பாகுபாடின்றி வழங்கப்படும்:


கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் கூறும் பொழுது, மாவட்டத்தில் 840 நியாய விலை கடைகள் மூலம் 5 லட்சத்து 4,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், 1 லட்சத்து 63 ஆயிரத்து705 பேருக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் 2 லட்சத்து 32ஆயிரத்து 379 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6000மும், 1 லட்சத்து 4ஆயிரத்து 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரமும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.


நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண நிதி வழங்குவதற்காக 220 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து விதமான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை கட்டாயம் வழங்கப்படும்.


குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அவர்களுக்கும் தமிழக அரசின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். ரேஷன் கடைகளில் நிவாரணம் பெறும் போது வைக்கப்படும் கைரேகை பதிவாகாத முதியவர்கள் உடல் நலம் குன்றியவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது அவர்களுக்கும் முறையாக அரசின் நிவாரணம் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.