தசரா என்றதுமே தமிழர்களின் நினைவுக்கு வருவது நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள் தான். மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள், இரண்டாவதாக குஜராத்தின் தாண்டியா நடனம், கொல்கத்தாவின் துர்கா பூஜை மற்றும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசராக்கள் தான். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5ம் தேதி நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறுகிறது. வருடந்தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த தசரா பண்டிகையின் போது அனைத்து ஊர்களிலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கிய இடமாக குலசேகரப்பட்டினம் உள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா உலக அளவில் எட்டுவதற்கு காரணம் பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று அதனை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று முத்தாரம்மன் கோயிலில் வந்து செலுத்துவது தான். காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலைஆடன், ராஜா, போலீஸ், பெண்வேடமிடுதல் என நூற்றுக்கணக்கான வேடங்களை தத்ரூபமாக வேடமிட்டு விரதமிருந்து கோயிலுக்கு செல்வர்.




இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெற்ற தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. இந்த ஆண்டு நோய் பரவல் குறைந்து வழக்கமான சூழல் திரும்பியதன் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தசரா திருவிழா நடைபெற இருக்கிறது. குலசேகரபட்டினம் கடற்கரையில் நடைபெறும் தசரா திருவிழாவிற்காக கொடியேற்றத்தன்று பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வண்ணம் காப்பு கட்டி 10 நாட்கள் விரதம் இருந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பத்தாம் நாள் நடைபெறும் தசரா திருவிழா அன்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கடற்கரையில் நடைபெறும் சூரசம்காரம் காண்பது வழக்கம். இந்தாண்டு நோய் பரவல் இல்லாத நிலையில் பக்தர்கள் வேடமடைந்து கோவிலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.  




இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி கொண்டாடத்தில் தங்களுக்கான  வேட பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நெல்லை டவுண் கோயில் வாசல் பகுதியில் வேடம் அணியும் பக்தர்களுக்காக விதவிதமான அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. விநாயகர் உள்ளிட்ட தெய்வ வேடங்கள் அணியும் பக்தர்களுக்காக விதவிதமான வடிவங்களில் அலங்கார பொருட்களும், காளி அம்மன், பார்வதிதேவி, மீனாட்சி போன்ற வேடமணியும் பக்தர்களின் சிகை அலங்காரத்திற்கான தலைமுடி, சூலாயுதம், வாள், கத்தி, கேடயம் போன்ற பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளது. இது தவிர கரடி, குரங்கு, புலி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் வேடமணியும் பக்தர்களுக்கான உடைகள் முகமூடிகள் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டுகளில் வேடமணியும் பக்தர்களுக்காக முகமூடிகள் பேப்பர் கூழ் கொண்டு தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. ஆனால் தற்போது உள்ள நவீன காலத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் பைபர், பிளாஸ்டி பாரிஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் விற்பனைக்கு அதிக அளவில் வந்துள்ளன. இது தவிர அம்பாள் உள்ளிட்ட தெய்வ வேடங்கள் அணியும் பக்தர்களுக்கான நகைகள், காதுமாட்டி, கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட அலங்காரப் பொருட்களும் விதவிதமான வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. காளி வேடம் அணியும் பக்தர்கள் அணிந்து கொள்வதற்காக பிளாஸ்டிக் மண்டை ஓடுகளால் தயார் செய்யப்பட்ட மாலைகள், பைபரால் தயார் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாலை அணியும் பக்தர்களுக்காக நவகண்டி மாலை, சிவப்பு முத்துமாலை, சந்தன மாலை உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.




இதுகுறித்து கடை உரிமையாளர் ஈஸ்வரன் கூறும் பொழுது, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 100 சதவிகிதம் நடைபெற்று வந்த வியாபாரம் 10 சதவிகிதம் வரை மட்டுமே இருந்தது. இதனால் வியாபாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது.  இந்தாண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாத காரணத்தால் வியாபாரம் அதிகம் இருக்க கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு 10 முதல் 15 சதவீத விலை ஏற்றமும் உள்ளது. பலர் இந்த தொழிலை விட்டு சென்றதால் இந்தாண்டு கையால் செய்யக்கூடிய பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது, இந்தாண்டு பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்று   எதிர்பார்த்து இருக்கிறோம் என்று தெரிவித்தார். 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான வேடம் அணியும் பக்தர்களுக்காக அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, காளி வேடம் அணியும் பக்தர்கள் தலையில் சூடும் முடி ரூபாய் 4500 முதல் 5000 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வேட பொருட்கள் வாங்க வந்த முத்துபட்டன் கூறும் பொழுது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வேடமணிந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது, ஆனால் இந்தாண்டு அனுமதி கிடைத்ததால் அதனை வாங்க வந்துள்ளோம். நெல்லை டவுணில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் வாங்கி செல்ல ஆர்வமுடன் வந்துள்ளோம். ஆனால் பொருட்களின் விலை இந்தாண்டு அதிக அளவில் உள்ளது. இருப்பினும் கோவிலுக்கு இந்தாண்டு வேடமணிந்து செல்லும் மகிழ்ச்சியில் பொருட்கள் வாங்கி செல்வதாக  தெரிவித்தார்.