தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 11வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் 3 - 1 என்ற கோல்கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தி உத்தரபிரதேசம் ஹாக்கி அணி வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச்சென்றது.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஏற்பாட்டின் பெயரில் கடந்த 16-ஆம் தேதி முதல் தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷீப் ஆடவருக்கான போட்டிகள் தொடங்கி 10 நாள்கள் நடைறெ;றது. இதில் 27 அணிகள் கலந்து கொண்டன. முதலில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் காலியிறுதி போட்டியிலும் விளையாடின. இதையெடுத்து சண்டிகர், ஓடிசா, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்று, நேற்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.



இறுதி போட்டிக்கு முன்பாக போட்டியின் நிறைவு விழா இன்று ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார். இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஹாக்கி இந்தியா துணைத்தலைவர் போபாலநாத் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ஆனந்த்குமார், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில் எதிர்காலத்தில் ஹாக்கி வீரர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கி, விளையாட்டு வீரர்களை நேர்மையாக தேர்வு செய்து, இன்னும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், நமது வீரர்களும் ஹாக்கி உள்பட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்பார்கள் என்பதில் மாற்றுகருத்து இல்லை, 8 முறை ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கம் வென்ற நிலையில், 1980-க்கு பின்னர் பதக்கம் பெறமுடியாத நிலை இருந்தது.

 

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற டேக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நமது விளையாட்டு வீரர்கள் பெருமை சேர்த்துள்ளனர். உலக தரவரிசையில் இந்தியா ஹாக்கியில் 3-வது இடத்தில் உள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்திய வீரர்கள் தங்க பதக்கம் பெறுவார்கள் என்றார்.



இதையெடுத்து சமீபத்தில் நடைபெற்ற உலக ஜூனியர் ஹாக்கி கோப்பை இந்திய உத்தேச அணி பட்டியலில் இடம் பெற்ற கோவில்பட்டி ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் மற்றும் நெல்லையை சேர்ந்த ஹாக்கி வீரர் தீரஸ் ஆகியோருக்கு ஏஜிஎஸ்சில் மத்திய அரசு பணி கிடைத்துள்ளது. அவர்களை கனிமொழி எம்.பி. பாராட்டினார்.

 

இதையெடுத்து இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.  போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. போட்டியின் 15வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணி வீரர் சாரதாநந்துதிவாரி பெனால்டிக்கார்னர் மூலமாக முதல் கோலை அடித்தார். இதையெடுத்து 16, 34-வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணியில் அருண் சஹாணி 2 கோல்கள் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். சண்டிகர் அணி வீரர் ராமன் 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் இறுதியில் உத்தரபிரதேச ஹாக்கி அணி 3 - 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச் சென்றது. 2-வது இடத்தினை சண்டிகர் அணி பெற்ற வெள்ளி கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற 3,4-வது இடத்திற்கான போட்டியில் ஒடிசா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி வெண்கல கோப்பையை தட்டிச்சென்றது.



பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேச ஹாக்கி அணிக்கு கனிமொழி எம்.பி தங்க கோப்பை வழங்கினார். 2-வது இடம் பிடித்த சண்டிகர் அணிக்கு அமைச்சர் கீதா ஜீவன் வெள்ளி கோப்பை வழங்கினார். 3-வது இடம் பிடித்த ஒடிசா அணிக்கு அமைச்சர் சிவ.மெய்யநாதன் வெண்கல கோப்பையை வழங்கினார்.