தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் உள்ள உப்பளங்களில் கடந்த சில தினங்களாக பிளமிங்கோ பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இது, அவ்வழியே நடைபயிற்சி செல்வோருக்கும், பயணிப்போருக்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சியாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பிளமிங்கோ பறவைகள் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் முகாமிடாத நிலையில், இந்த ஆண்டு திடீரென முகாமிட்டிருப்பது அப்பகுதி வாழ் மக்களுக்கும் பறவைகள் ஆர்வலர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

இதுகுறித்து தூத்துக்குடி பறவைகள் ஆர்வலர் க்யூபர்ட் தெரிவிக்கையில், தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள உப்பளங்களில் முகாமிட்டுள்ள பிளமிங்கோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கக் கூடியவை அல்ல. அவை அனைத்தும் இந்திய நாட்டிற்குள்ளேயே வடக்கு கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவை. சீசன் காலத்திற்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பறக்கக் கூடியவை. தற்பொழுது தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில்  பறவைகள் சீசன் ஆரம்பித்துள்ளதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் விதமாக பிளமிங்கோ பறவைகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளன.

 

பொதுவாக இவை உப்பளங்களில் விளையும் ஒருவித பாசிகளையும், சிறுசிறு நத்தைகளையும்,  பூச்சிகளையும், நண்டுகளையும் உணவாக உட்கொள்ளும். மிகவும் கூச்ச சுபாவம் உடைய இப்பறவைகள் மனிதர்களின் நடமாட்டத்தை வெகு தூரத்தில் இருந்தே உணரக் கூடியவை. எனவே தற்காத்துக்கொள்ளும் விதமாக இவை உடனே பறந்து செல்ல கூடியவை. இவ்வகை பிளமிங்கோ பறவைகளுக்கு பெரும்பாலும் ஆபத்தாக அமைபவை தெருநாய்கள் மட்டுமே. ஏனெனில் இரைக்காக பிளமிங்கோ பறவைகள் உப்பளங்களில் முகாமிட்டிருக்கும்போது தெருநாய்கள் அவற்றை வேட்டையாட கூடிய ஆபத்தான சூழல் உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் பிளமிங்கோ பறவைகள் வேட்டையாடப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து தற்போது வேட்டை தடுப்பு காவலர்களால் இந்த இனம்  பாதுகாக்கப்பட்டு வருகிறது.



அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் பிளமிங்கோ பறவைகள் இல்லை என்றாலும் இவ்வகையான பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை தான். இவை பொதுவாக 1 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வளர கூடியது. நன்கு வளர்ச்சி அடைந்த பிளமிங்கோ பறவை 8 கிலோ எடை வரை இருக்கும். அலகின் நீளத்தை வைத்தும், உயரத்தை வைத்து இவற்றில் ஆண் பெண் இனம் கண்டறியப்படுகிறது. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை குறைந்தது மூன்றிலிருந்து நான்கு முட்டைகள் இடும்.



 

இதன் குஞ்சு பொரிப்பு காலம் 30 முதல் 35 நாட்கள் ஆகும். அதன் பிறகு இவை அடுத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். பொதுவாக பிளமிங்கோ பறவையின் இறகுகள் அடிப்பாகத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் வெளிப்படும் சிறகுகள் அவை இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ளதை அடையாளப்படுத்தும். 3 வயது உள்ள பிளமிங்கோ பறவை இனப்பெருக்கத்திற்காக தயாராகிறது. பொதுவாக இவை நன்னீர் வாழ் இடங்களில் தட்டையான மரங்களில் அதிகம் காணப்படும். சீசன் காலங்களில் உணவு இரைக்காக மதுரை, அவனியாபுரம், ராமேஸ்வரம், கோடியக்கரை, பட்டணமருதூர், கூந்தன்குளம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இவற்றை பார்க்க முடியும். இவை கூட்டமாக வாழக்கூடியவை. இவற்றை மொத்தமாக பார்ப்பது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக தரும் என்றார்.



 

வலசை போதல் என்பது பல இனங்களை சேர்ந்த மிருகங்கள், பறவைகள் ஆகியன பருவகாலங்களையொட்டி இடம் பெயர்வதை குறிக்கின்றது. விலங்ககள் , பறவைகள் வாழிடத்தை பருவகாலங்களில் மனிதரை போன்றே மாற்றி கொள்கிறது குறிப்பிட்ட காலங்களில் பறவைகள் தங்களின் வாழிடத்தை தேடி ஆண்டுதோறும் இடம் பெயர்வது வலசை போதல் என்படும். வலசை போதலின் போது பறவைகள் பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதன் உதவியோடு சேருமிடத்தை அறிகின்றது.