தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகாவிற்கு 18 ஆயிரம் லிட்டர் தான் அரசு ஒதுகீடு செய்து வரும் நிலையில் ரேஷன் கடைக்கு போக வேண்டிய 5 ஆயிரம் லிட்டர் மண்ணெணெய் தனிநபர் குடோன் மற்றும் கடையில் பேரலுடன் விற்பனைக்கு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று 5 ஆயிரம் லிட்டர் மண்ணெணெய் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவில்பட்டியில் 63 இடைத்தரர்கள் ரேஷன் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், மற்ற துறையினர் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் ரேஷன் பொருள்கள் கடத்தலில் ஹாட் ஸ்பாட்டாக கோவில்பட்டி நகரம் மாறி வருவதாக போலீசார் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

 

   கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான கடையில் 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 7 கேன்களில் மண்ணெணெய் இருப்பது கண்டுடிபிடிக்கப்பட்டது. இதையெடுத்து கடையில் இருந்த மணி மற்றும் அவரது உறவினர் பாலமுருகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் கருவாட்டுபேட்டை தெருவில் உள்ள ஒரு குடோனில் மண்ணெணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

               


           இதையெடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது 27க்கும் மேற்பட்ட மண்ணெணெய் பேரல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மண்ணெணெய் தனிநபர் குடோனுக்கு வந்ததது எப்படி என்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதையெடுத்து போலீசார் கோவில்பட்டி கோட்டாட்சியர், தாலூகா அலுவலகம், வட்ட வழங்கல் பிரிவுக்கும், தூத்துக்குடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். . இதன் பின்னர் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மண்ணெணெய் பேரல்கள் தூத்துக்குடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடை மற்றும் குடோன் இரண்டையும் சேர்த்து 5 ஆயிரம் லிட்டர் மண்ணெணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   

 

     

              கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி, கோதுமை, மண்ணெணெய் கடத்தல் மற்றும் பதுக்கல் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது  ரேஷன் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது தான் அதிகளவில் பிடிபட தொடங்கியுள்ளன. மேலும் காவல்துறை தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் அடுத்தடுத்து ரேஷன் பொருள்கள் பதுக்கல் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது.  கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு சரியான தண்டனை கிடைப்பதில்லை என்றும், கோவில்பட்டியில் மட்டும் 63க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் இந்த பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வ சாதரணமாக ரூ 3 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை லாபம் பார்த்து வருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். 

 

அரிசி, கோதுமை கூட பொது மக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி இருக்கலாம் என்று கூறலாம். ஆனால் ரேஷன் கடைகளுக்கு போக வேண்டிய மண்ணெணெய் பேரல்களுடன் தனிநபர் குடோனுக்கு சென்றது சந்தேகத்தினை  ஏற்படுத்தியுள்ளது. இது அரசு அதிகாரிகளின் துணை இல்லமால் நடந்து இருக்காது என்பதால் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முறையாக விசாரணை நடத்தினால் பலர் பிடிபடுவார்கள்