தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(55). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். லோடு ஆட்டோ ஓட்டுநரான பழனிச்சாமி கடந்த மாதம் 19-ம் தேதி தனது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்துக்கு சென்ட்ரிங் பலகைகளை ஏற்றிக் கொண்டு சென்றார். அங்கு அவற்றை இறக்கிவிட்டு, திரும்பி வரும் போது மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் தனியார் பள்ளி பகுதியில் பின்னால் வந்த கார், லோடு ஆட்டோ மீது மோதியது. இதில், லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில் பழனிச்சாமி காயமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் முதலுதவி அளித்தனர். ஆனால், பழனிச்சாமியால் எழுந்து அமரவோ, நடக்கவோ முடியவில்லை. முதுகு பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்டார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, நடு முதுகு எலும்பு பகுதியில் 2 இடத்தில் முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வலியை குறைக்கும் மருந்துகளை மருத்துவர்களை கொடுத்தனர்.பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி பெற்றனர். தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் பாண்டிபிரகாஷ், மோசஸ்பால், மனோஜ்குமார், மயக்க மருந்து நிபுணர் இளங்கோ உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "முதுகு பகுதி எலும்பில் ஏற்படும் முறிவு அறுவை சிகிச்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தான் நடந்து வந்தது. முதன் முறையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம். விபத்தில் சிக்கிய பழனிச்சாமிக்கு நடந்த ஸ்கேன் பரிசோதனையில் அவரது நடு முதுகு எலும்பில் 2 இடங்களில் முறிவு இருந்த கண்டறியப்பட்டது. இதையடுத்து இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் அகத்தியனிடம் வழிகாட்டுதல்படி அறுவைசிகிச்சை செய்து முடித்தோம். இதற்காக 10 செ.மீ. உயரத்திலான 2 டைட்டானியம் கம்பிகள் வைக்கப்பட்டு, 4 ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. சாதாரண கம்பியை விட டைட்டானியம் கம்பிகள் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு. தொடர்ந்து 3 நாளில் இருந்து அவருக்கு இயன்முறை (பிசியோதெரபி) பயிற்சியும், நடைபயிற்சியும் வழங்கினோம். 14 நாட்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்து, இன்று அவரை சிகிச்சை முடித்து அனுப்புகிறோம். அவருக்கு சில பயிற்சிகளை கற்றுக்கொடுத்துள்ளோம். அதனை அவர் வீட்டில் இருந்தவாறே செய்ய வேண்டும். 3 மாத ஓய்வுக்கு பின்னர் அவர் வேலைக்கு செல்லலாம். அடுத்து 6 மாதங்கள் வரை, மாதம் ஒருமுறை அவரை பரிசோதனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்” என்று கூறினார்.
சிகிச்சை பெற்ற பழனிச்சாமி கூறுகையில், “விபத்து நடந்தபின் என்னால் எழ முடியவில்லை. பயந்துவிட்டேன். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் என்னை பரிசோதித்த டாக்டர்கள் முதுகுதண்டுவடத்தில் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்றார்கள். 15 நாட்கள் உட்கார முடியவில்லை. ஆபரேஷன் செய்யப்பட்டபின் என்னால் உட்கார முடிகிறது. நடக்க முடிகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட காரணத்தால் இன்று நடக்க முடிகிறது, இதே அறுவை சிகிச்சையே தனியார் மருத்துவமனையில் செய்தால் மூன்று லட்ச ரூபாய் வரை செலவு ஆகி இருக்கும்” என்றார்.