தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது புளியரை.. இங்குள்ள மோட்டார் வாகன சோதனை சாவடிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை முதலே தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி அருகே மாற்று உடையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு சுமார் 8.30 மணி அளவில் தனது கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். இதனை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தவணை விலக்கு அருகே அவர்கள் காரில் வந்த பொழுது பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்தினர். பின் அவர் கொண்டு சென்ற பேக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். அப்பொழுது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இந்த பணம் யாருடையது ? அலுவலக பணமா? அல்லது லஞ்ச பணமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி பல்வேறு கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்ததுள்ளது.
அதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த ரூ.2.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்திகின்றனர். தமிழக-கேரளா எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடியில் பணி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை தடுத்து நிறுத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டு கட்டாக லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக - கேரள எல்லையான புளியரை வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு செல்கிறது. புளியரையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வனத்துறை, வணிகவரி, காவல், போக்குவரத்து, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் சோதனை சாவடிகள் உள்ளது. இத்தனை சோதனை சாவடிகளையும் தாண்டி ரேசன் அரிசி, கனிமவளங்கள் என பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதோடு கேரளாவில் இருந்து கழிவுகளும் தமிழக எல்லை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இது போன்ற கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில அதிகாரிகள் இது போன்ற லஞ்சம் பெற்று கொண்டு அரசின் உத்தரவை கண்டு கொள்ளாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. எனவே தமிழக கேரள எல்லை பகுதியில் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், கடத்தலுக்கு துணை போகும் அதாவது தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.