நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட்மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணுஉலை நிர்வாகம் சார்பில் அணு உலை அமைந்து இருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகளை செய்து வருகின்றனர்.


குறிப்பாக கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் சூழலில் அங்கு மழை நீர் மற்றும் வீடுகளில் தேங்கும் கழிவு நீர் செல்ல வழியில்லாத நிலையில் அணு உலை நிர்வாகம் சார்பில் 8 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.


 




குறிப்பாக இந்த பணிகள் துவங்கப்பட்டு சில மாதங்களிலேயே பொதுமக்கள் இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை, தெருக்களின் இருபுறமும் கட்டப்படும் கால்வாய் மூலம் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் மழை நீர் அந்த கால்வாயில் செல்லும் வகையில் இருக்க வேண்டும், ஆனால் கால்வாயை உயர்த்தி, எந்தவித பயனும் இன்றி கட்டி வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்தனர்.


கால்வாயை முறையாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம்  என அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது 3 ஆண்டுகள் ஆகியும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி வருகின்றனர்.




 தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு


மேலும் தற்போது கால்வாய் பணிகள் கிடப்பில் கிடப்பதால் மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து செல்லக்கூடிய கழிவுநீர் செல்ல வழியின்றி அந்த கால்வாயில் தேங்கி அந்தப்பகுதி  பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேங்கியிருக்கும் கழிவு நீரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கால்வாயை கழிவு நீர் செல்லும் வகையில் முறையாக கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




இதுகுறித்து பாஜக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறும் பொழுது, ’’கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கூடங்குளத்தில் கழிவு நீர் கால்வாய் பணிகள் செய்யப்பட்டன. எந்தவித திட்டமிடலும் இல்லாமல், வேலை தெரியாத பொறியாளரை வைத்து பணிகளை செய்தனர். தற்போது கழிவு நீர், மழை நீர் என எதுவுமே செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகள் முழுவதும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.


இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே  இந்த சுகாதார சீர்கேட்டை வரும் 22 ஆம் தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம்  சரி செய்யவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போகிறோம்’’ என்று தெரிவித்தார்.




அதே போல சமூக ஆர்வலர் ராதை காமராஜ் கூறும்பொழுது, ’’பொதுமக்கள் அடிப்படை தேவைக்காக குறிப்பாக குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, கொசு தொல்லை ஆகியவற்றிக்காக  ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றால்மக்களை அவமரியாதையாக நடத்துகின்றனர், கேள்வி கேட்டால் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய தலைவரே குடிநீர் மோட்டார் அறைக்கு பூட்டு போட்டு யாரும் திறக்க கூடாது என்று கூறுகின்றார். இது போன்ற சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு பணி செய்யவே பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அதனை உரிய முறையில் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். கழிவு நீர் கால்வாயை முறையாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.


உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?


ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.