கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மாத போராட்டத்திற்கு பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு குளங்களில் மண்ணெடுக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் , சட்டவிரோதமாக குளத்தில் சிலர் ஆளும் கட்சி பிரதிநிதி துணையுடன் மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு குளங்களிலிருந்து மண் எடுக்க அரசு அனுமதியை ரத்து செய்ததால் பல மாதங்களாக மண் கிடைக்காமல் மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கிய நிலையில் இருந்தனர். இதனால் தொடர் போராட்டங்கள் மற்றும் பல கோரிக்கை மனு கொடுத்தல் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தினமும் நாடி வந்து சென்றனர். இந்த நிலையில் தொடர் போராட்டங்களில் காரணமாக மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு குறிப்பிட்ட குளங்களில் இருந்து மண்பாண்டங்கள் செய்வதற்கு மண் எடுக்க அனுமதி வழங்கியது. அதற்கான அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் மூலம் பாஸ் வழங்க அனுமதி கொடுத்தது. ஆனால் சட்டவிரோதமாக குளத்தில் சிலர் ஆளும் கட்சி பிரதிநிதி துணையுடன் மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதிக்கபட்ட பாஸ்-ஐ அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத கும்பல்கள் கைப்பற்றி குளங்களில் இறங்கி மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகறது. இதனால் மண் எடுக்க அனுமதி கிடைத்தும் சட்ட விரோத கும்பல்களால் மண் எடுப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட வீர மார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள வில்லச்சேரி குளத்தில் இறங்கி ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை முற்றுகையிட்டனர். மண் அள்ள வந்த வாகனங்களை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பாஸில் திருட்டுத்தனமாக சட்ட விரோத கும்பல் மண் எடுப்பதற்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றம் சாட்டிய மண் பாண்ட தொழிலாளர்கள், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள குளத்திற்கு காவல்துறையினரும் அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்