தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.400 கோடி அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 


பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைப்பது, வாகன நெரிசல் இல்லாத விரைவான பயணம், தரமான சாலைகளில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் என்று பல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் உட்பட நாடு முழுவதும் அறிமுகமான புதிதில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி, கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு அனுமதித்து வந்தனர். சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்தினாலும் விரைவான, பாதுகாப்பான பயணம், தரமான சாலை என்று மக்கள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். 




 


தூத்துக்குடி-மதுரை இடையே கடந்த 2007-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. ஆந்திரா மாநில தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடி, கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகளுடன் சுங்க கட்டணம் வசூலித்து வந்த‌து. கடந்த 2021ம் ஆண்டு, இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல பணிகள் முடிக்கப்பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று இந்த சாலையில் சில இடங்களில் இணைப்பு சாலைகள் சரிவர அமைக்காமல் இருந்ததாகவும், சாலை பராமரிப்பு பணியும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.





இந்நிலையில், தூத்துக்குடி மதுரை நான்குவழிச் சாலையில் விளக்குகள் பொருத்தாது, எதிரே வரும் வாகனங்கள் கண் கூசாமல் இருக்க சாலையின் நடுவே செடிகள் வைக்காமல் இருப்பது, இருப்பக்க எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், கழிப்பறை வசதிகள், இணைப்புச்சாலை குறியீடு, பல இடங்களில் பேருந்து நிறுத்தம் இல்லாதது, சிப்காட் அருகே ரயில்வே மேம்பாலம் போடப்படாததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.


இதனைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலம் கட்டும் பணி, பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாத தனியார் ஒப்பந்ததாரருக்கு சுமார் ரூ.400 கோடி அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனம் முடிக்காமல் இருந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி சாலை பராமரிப்பு பணி, இணைப்பு சாலை அமைத்தல், ஸ்டெர்லைட் அருகே பாலம் கட்டும் பணியையும் விரைவுபடுத்தி உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது. இதனால் பரிந்துரை மீது இதுவரை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண