கன்னியாகுமரியில் அரசு பள்ளியில் மதமாற்ற புகார் விவகாரத்தில், தையல் ஆசிரியை பியட்றிஸ் தங்கத்தை  பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் பியட்றிஸ் தங்கம்தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறு பேசியதாக சொல்லப்படுகிறது.


இது மட்டுமல்லாமல், கிறிஸ்துவ மதம் சார்ந்த பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து மாணவர்களிடம் இதே நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்படும் நிலையில், இந்தப் புகார்கள் பெற்றோருக்கு சென்றன. இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவலளித்து  தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். இதனிடையே தலைமை ஆசிரியர் மற்றும் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில்தான்  ஆசிரியை பியட்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்