கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையை ஒட்டிய மீட் தெருவில் பயன்பாட்டில் இல்லாமல் நீண்ட காலமாக பூட்டிய நிலையில் பாழடைந்த ஓட்டுக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்த கட்டட வளாகத்தினுள் புதர்களுக்கிடையே இரண்டு வாலிபர்கள் உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. டி.எஸ்.பி நவீன்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்த இருவரது உடலும் ஒட்டியவாறு கிடந்தது. அவர்களைப் பற்றி போலீஸர் விசாரணையில் இறங்கினர். அதில் ஒருவர் பெயர் டான் போஸ்கோ (20) எனவும், மற்றொருவர் கருங்கல் பகுதியை சேர்ந்த ராபர்ட் (33) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பாழடைந்த ஓட்டு வீட்டில் இருவரும் மின் ஒயர்களை திருடுவதற்காக சென்றுள்ளார்.
வீட்டில் உள்ள ஓயர்களை கட்டிங் பிளேயரால் வெட்டி சுருட்டி எடுத்துள்ளனர். பின்னர் வெளியே வந்தவர்கள் கைகளில் ஒரு மின்கம்பி தட்டுப்பட்டுள்ளது. அது வீட்டின் வெளிபுறத்தில் நிற்கும் மின்கம்பத்தில் இருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ள ஸ்டே கம்பியாகும். அவர்கள் அந்த ஸ்டே கம்பியை கட்டிங்பிளேயரால் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர். ஸ்டே கம்பியை எளிதில் வெட்ட முடியாததால் அந்த கம்பியை பிடித்து இழுத்துள்ளர். அதில் ஸ்டே கம்பி மின் கம்பத்தில் செல்லும் மின்சார ஒயரில் பட்டு ஷாக் அடித்துள்ளது. அதனால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் உடலை மீட்ட வடசேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இந்த பாழடைந்த கட்டடத்தை ஒட்டியுள்ள பெரிய கட்டடங்களில் வந்த சிலர் புதர்களுக்கு மத்தியில் இருவர் கிடந்ததை கண்டுள்ளனர். உடனே எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாங்கள் சென்று பார்த்தபோது அவர்கள் மின்கம்பத்தில் இருந்து செல்லும் ஸ்டே கம்பியை பிடித்தபடி இறந்து கிடந்தனர். எனவே அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்பதை உறுதி செய்தோம்.
டான்போஸ்கோ மற்றும் ராபர்ட் ஆகியோர் பல இடங்களில் திருடுவதும், அதன்மூலம் மது குடித்துவிட்டு ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளன. ராபர்ட் மீது 2019 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. மீட் தெதுவில் பாழடைந்த வீட்டை நோட்டமிட்ட இவர்கள் மின் கம்பியை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேயரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.