கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகள், குடியிருப்பு பகுதிகள், விவசாயநிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய மத்திய அரசின் சிறப்பு குழு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய நிதித்துறை ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.பி.கவுல், மத்திய நீர்வள ஆராய்ச்சி இயக்குநர் தங்கமணி, மத்திய எரிசக்திதுறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் அடங்கிய மத்திய குழு முதலில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்த மழைச்சேதம் குறித்த புகைப்படங்களை காட்சி படுத்திருந்த கண்காட்சியை பார்த்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இதனை தொடர்ந்து வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள பிள்ளைபெத்தான் அணைக்கட்டு, நுள்ளிவிளை மற்றும் குமாரகோவில் சானல் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு, வைக்கலூர், பார்த்திப புரம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள பாதிப்பு என 10 இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்திடம் கேட்ட போது குமரி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என்பது மிகவும் கொடுமையான ஒன்று ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர் இதேபோல் பல சாலைகள் துண்டிக்கப்பட்டது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வயல்வெளிகளிலும் விவசாய நிலங்களையும் சூழ்ந்ததால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படியான ஒரு பேரிடரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு நாள் ஆவது மத்திய குழுவிற்கு தேவைப்படும் ஆனால் சுமார் 3 மணி நேர சுற்றுப்பயணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வது ஏற்புடையதாக இல்லை இது குறித்து ஆய்விற்கு வந்த மத்திய குழுவிடம் நான் கேட்டபோது நாங்கள் செல்லும் பகுதி அனைத்தும் ஒரு சாம்பிள் போன்றது என்றும் அதிகாரிகளிடம் இருந்து முழு தகவல்களும் பெற்று ஆய்வறிக்கையில் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்தனர் என விஜய் வசந்த் கூறினார்.