கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர்  ஆல்பின் ( வயது33). இவர் கட்டிட பணிக்காக வரைபடம் வரையும் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது வேலைக்காக புலிப்பணம் பகுதியில் ஒரு கடை எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் 11 மணி அளவில் கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம். அதே போல் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். பின் இன்று காலை கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மேஜையில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.  அப்போது மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட்டு வேலையில் ஈடுபட்டதை அறிந்த ஆல்பின் இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது விசாரணையில் உள்ளே இருந்த 6 மடிக்கணினிகள் மற்றும் ரொக்கமாக ரூபாய் 47500/- திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர், அப்போது அருகில் இருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இரண்டு இளைஞர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. குறிப்பாக இரண்டு இளைஞர்களும் தலையில் ஹெல்மட் அணிந்த படி கடைக்கு வந்து கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டை இரும்பு கம்பியால் உடைக்கின்றனர். பின் இருவரும் உள்ளே சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதோடு வெளியே வந்து கடையின் ஷட்டரை மீண்டும் மூட முயற்சிக்கின்றனர், அப்போது ஒருவர் இன்னொருவரை தூக்கி பிடித்தபடி அவரை ஷட்டரை கீழே இழுத்து அடைக்கின்றார், பின் இருவரும் அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்த நிலையில் அதனடிப்படையில் போலீசார் இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றானர். இரவு நேரத்தில் ஹெல்மட் அணிந்த இரண்டு இளைஞர்கள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது