உற்பத்தி பொருட்களை அப்படியே விற்காமல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் குமரியை சேர்ந்த விவசாயி மீனாட்சி சுந்தரம்.
உருக்கு எண்ணெயின் பயன்கள்:
உருக்கு எண்ணை சமையலுக்கும் நல்லது, மருத்துவ குணம் மிகுந்தது. இந்த எண்ணையை பிறந்த குழந்தை தொடங்கி எல்லா வயது குழந்தைகளுக்கு உடம்பில் தேய்த்து மசாஜ் செய்வதால் மேனி பளபளக்கும், தலைக்கு தேய்த்து குளித்தால் முடி அடர்த்தியா வளரும், உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
செய்முறை :
25 கிலோ தேங்காயை உடைத்து துருவினால் 12 கிலோ தேங்காய் துருவல் (தேங்காய் பூ) கிடைக்கும். 12 கிலோ தேங்காய் துருவலை பெரிய கடாயில போட்டு 12 லிட்டர் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும். எவ்வளவு கிலோ துருவல் கிடைக்குதோ அவ்வளவு லிட்டர் தண்ணீர் சேர்க்கணும்கிறது முக்கியம். தேங்காய் துருவல் நல்லா கொதித்து வரும்போது நறுமணம் வரும். அந்த சமயத்துல கடாயை இறக்கி வச்சு ஆற விடவேண்டும், ஆறிய பிறகு துருவலை கையால் பிழிஞ்சு பால் எடுக்க வேண்டும். துருவலை ஒரு மொற பிழிஞ்சா பால் முழுசா வந்துராதுங்கிறதுனால, அடுத்ததா துருவல்ல ரெண்டு லிட்டர் தண்ணி சேர்த்து துணியில வச்சு மறுபடியும் பிழிய வேண்டும். பிழிந்து எடுத்த தேங்கா பாலை அடிப்பகுதி கனமான கடாயில் ஒரு மூனு மணி நேரம் காய்ச்ச வேண்டும். காய்ச்சுறப்ப ஒரு பருவத்துக்கு மேல அடி பிடிக்காம கிண்டிகிட்டே இருக்கணும். சுத்தமான உருக்கு எண்ணெய்க்கு அடிப்பகுதியில் மாவுபோல தங்குறதை கக்கன்னு சொல்வதுண்டு. காய்ச்சி முடிச்சதும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் பாரம்பர்ய உருக்கு எண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ கக்கனும் கிடைக்கும்.
சந்தை நிலவரம் :
குமரி மாவட்டத்துக்கு வெளியேதான் விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளது. தேங்காய் சராசரியா 500 கிராம் இருக்கும். ரெண்டு தேங்காய் சேர்ந்தா ஒரு கிலோ வரும். நூறு தேங்காய் சேர்ந்தால் 50 கிலோ வரும். ஒரு கிலோ தேங்காய் 26 ரூபாய் வீதம் கணக்கிட்டால் 50 கிலோவுக்கு 1300 ரூபாய் கிடைக்கும். அதே 50 கிலோ தேங்காயை உடைச்சு, உலர வச்சா 18 கிலோ கொப்பரை கிடைக்கும். ஒரு கிலோ கொப்பரை 120 ரூபாய்க்கு விற்றால் சுமாரா 2160 ரூபாய் கிடைக்கும். கொப்பரையை செக்கில ஆட்டி எடுத்தா பதிமூன்றரை லிட்டர் தேங்காய் எண்ணை கிடைக்கும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 280 ரூபாய்க்கு வித்தால் 3780 ரூபாய் கிடைக்கும். கூடவே பிண்ணாக்கும் கிடைக்கும். ஐம்பது கிலோ தேங்காயை பால் பிழிந்து காய்ச்சினா எட்டு லிட்டர் உருக்கு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 700 ரூபாய் வீதம் விற்பனை செஞ்சா 5600 ரூபாய் கிடைக்கும். கூடவே கக்கனும் கிடைக்கும். இதுபோக நூறு தேங்காயில உபரி வருமானமா ஒன்பது கிலோ சிரட்டை கிடைக்குது. ஒரு கிலோ சிரட்டை ஏழு ரூபாய்க்கு விற்பனை ஆகுது. தேங்காய் கதம்பை (மட்டை) ஒன்று ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அதுமட்டுமில்லாம தேங்காய் தண்ணீரில் உடனடி பானம் தயாரிச்சு ஒரு லிட்டர் 75 ரூபாய்க்கு விற்கலாம். தேங்காயை மதிப்புக்கூட்டக் கூட்ட வருமானமும் அதிகரிக்கும்.
தென்னை விவசாயி மீனாட்சி சுந்தரம் பேட்டி:
எம்.ஏ ஆங்கில பட்டதாரியான மீனாட்சி சுந்தரத்திற்கு தென்னை விவசாயம்தான் பிரதானம். தேங்காயை அப்படியே விற்காமல், உலர்த்தி கொப்பரையாகவும், மரச் செக்கு எண்ணெய்யாகவும் விற்பனை செய்து வந்தவர் இப்போது பாரம்பர்ய உருக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
அவரிடம் பேசினோம் அப்போது அவர் கூறுகையில், “என் அப்பா சிவனணைந்த பெருமாள் வக்கீலுக்கு படிச்சிருந்தாலும் விவசாயத்தை பிரதானமா செய்தார். எங்க அப்பாதான் குமரி மாவட்ட உழவர் பெருமன்றம்ங்கிற சங்கத்தை தொடங்கி விவசாயிகளுக்கு வழிகாட்டினார். 1992-ல் அப்பா இறந்த பிறகு நான் முழுமையாக விவசாயத்தில் இறங்கிட்டேன். வேளாண்மையில லாபம் இல்லைங்கிறது மக்கள் மத்தியில பரவலான கருத்தா இருக்கு. அதைமாற்றி விவசாயியும் பெரும் முதலாளியாக ஆகணும்ங்கிறது எனக்கு ஆசை என்று தன்னைப்பற்றி கூறியவர் தேங்காய் விவசாயம் பற்றி சொல்லத்தொடங்கினார்.
எங்க பாரம்பரியம் விவசாயம் தென்னைதாங்க. எனக்கு எட்டு ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. தேங்காயை பொறுத்தமட்டில் பெரிய விலை கிடைக்காது. நான் விவசாயத்தில இறங்குன 1992ம் வருசம் வேலைக்கான கூலி ஒரு நாளைக்கு 17 ரூபாய். அப்போது ஒரு தேங்காய்க்கு விலை 4 ரூபாய். 1998-ல் சம்பளம் 150 ரூபாய், ஒரு தேங்காய் ஆறு ரூபாய். 2010-க்கு மேல ஒரு தேங்காய் ஒன்பது ரூபாய், ஆனால் ஒரு நாள் கூலி 450 ரூபாய் ஆனது. வேலைக்கான கூலி பல மடங்கு அதிகரிச்சாலும் விவசாய விளை பொருளுக்கான விலை அதிகரிப்பதில்ல. அதனாலதான் தேங்காயை அப்பிடியே விற்பனை செய்யாம மதிப்பு கூட்டி விக்கிறதுன்னு முடிவு எடுத்தேன்.
தேங்காயை உலர வச்சு கொப்பரையாகவும், மரச் செக்கில ஆட்டி தேங்காய் எண்ணெயாகவும் விற்பனை செய்தேன். இந்த சமயத்துலதான் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநராக இருக்கிற ஓளவை மீனாட்சி பாரம்பரிய உருக்கு எண்ணெய் தயாரிச்சா நல்ல மார்க்கெட் இருக்கும்னு எனக்கு வழிகாட்டுனாங்க. ஆரம்பத்துல 18 விவசாயிகள் சேர்ந்து குழு தொடங்கி, ஆளுக்கு ரெண்டு தேங்காய்வீதம் போட்டு பாரம்பரிய உருக்கு எண்ணெய் தயாரிச்சோம். முதன்முதலா நாங்க தயாரிச்ச மூனு லிட்டர் எண்ணையை ஒரு லிட்டர் 600 ரூபாய் வீதம் வேளாண் அதிகாரிகளே வாங்கிகிட்டாங்க. அதுல லாபர் கிடைச்சதுனால அப்புறம் நான் உருக்கு எண்ணெய் தயாரிக்கிறதை தொடர்ந்தேன். இப்போ ஒரு லிட்டர் உருக்கு எண்ணெய் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன் என்றவர் விவசாயத்துக்காக கிடைத்த விருதுகள் பற்றி விவரித்தார்.
2003-ல் சிறந்த விவசாயிக்கான விருதை அன்னைக்கு இருந்த கலெக்டர் ககன்தீப் சிங் பேடி கொடுத்தார். 2009-ல் வேளாண்மை பல்கலை கழகத்தில் இருந்து சிறந்த விவசாயி விருது கொடுத்தாங்க. 2010ல் அன்றைய வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேளாண்மை செம்மல் விருது கொடுத்தார். 2013ல் குஜராத் முதல்வராக மோடி இருந்த சமயத்தில சிறந்த விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி நடத்தினார். அதில் தமிழ்நாட்டுல இருந்துபோன விவசாயிகள் குழுவில நானும் இருந்தேன். அந்த நிகழ்ச்சியில 51000 ரூபாயும் சிறந்த விவசாயி விருதும் கொடுத்தாங்க. 2018 ஆம் வருஷம் நடந்த சுதந்திரதின விழாவில் இப்ப இருக்கிற கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சிறந்த விவசாயி விருது கொடுத்தார். பொருட்களை மதிப்புக்கூட்டி மார்க்கெட் செய்ய தெரிஞ்சால் விவசாயத்தில பெரிய அளவுல சாதிக்கலாம்என்று நம்பிக்கையுடன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்