நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைமகாராஜ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவ ஐயப்பன். திமுக பிரமுகரான இவரிடம் துரை என்பவர் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் டிரைவர் துரை காரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள வங்கியில் இருந்து 10 லட்சத்தை எடுத்துக் கொண்டு அடுத்ததாக பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் 7 லட்சம் என மொத்தம் 17 லட்சத்தை எடுத்துக் கொண்டு பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு சென்று உள்ளார். ஏற்கனவே  வங்கியில் எடுத்த பணத்தை காருக்குள் வைத்து காரை பூட்டி சாலையோரம் நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.




பின்னர் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது அவர் காரின் இடது பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் துரை காருக்குள் சென்று பார்த்தபோது காரில் இருந்த 17 லட்ச ரூபாயை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  பரமசிவ ஐயப்பனின் கார் ஓட்டுனர் துரை அருகே உள்ள பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துறை  துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர்  வந்து விசாரணை மேற்கொண்டனர்.  




அதேபோன்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்  காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான  வீடியோ காட்சிகளையும் கைப்பற்றி காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே நடைபெற்ற  இந்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண