குமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பது பெற்றோரை கலங்கடித்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அரவிந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஒரு சிலர் இன்னும் முதல்டோஸ் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு அதிகமாகி வருகிறது.




 

கடந்த சில நாட்களாக தினமும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 100 பேருக்கு சோதனை நடத்தப்பட்டால் அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. நேற்று 364 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேருக்கும் கிள்ளியூர், திருவட்டார், தோவாளை தாலுகாக்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 2.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அடுத்த அலையை நோக்கி செல்வதை தெளிவாக உறுதிபடுத்துகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மரணத்திற்கு எதிராக 97 சதவீத பாதுகாப்பையும், ஒருடோஸ் போட்டுக் கொள்வது 76 சதவீத பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.



 

அதாவது தடுப்பூசி போடாதவர்கள் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 200 பேர் மரணமடைகிறார்கள். அதுவே ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் 72 பேர் மட்டுமே மரணமடைவார்கள். மேலும் 2 டோஸ் போட்டுக் கொண்ட 10 ஆயிரம் பேரில் 6 பேர் மட்டுமே மரணமடைவர். இதன் மூலம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மர ணங்களை பெருமளவில் தவிர்க்க உதவியுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று 571 குழுக்கள் மொத்தம் 2,284 இடங்களில் தடுப்பூசி போட உள்ளார்கள். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அதேசமயம் சுகாதார பணியாளர்கள், அரசு துறைகளைச் சார்ந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்ப ட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது ஒரு சாதாரண சளிக் காய்ச்சல்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

குமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பது பெற்றோரை கலங்கடித்துள்ளது.