இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  “கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சட்டத்தை மீறி விதிமுறைகளை மீறி பணத்தாசையோடு தொழிலை செய்த காரணத்தினால் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நடைபெற்றதற்கு மிக முக்கிய காரணம் நிர்வாக சீர்கேடு, ஊழல், லஞ்சம். கல்குவாரியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இந்த வழக்கை அப்படியே மூடி மறைக்க பார்க்கின்றனர். உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் விடுதலை சிறுத்தைகள், கம்னியூஸ்ட் கட்சிகள் என அனைவரும் போராடுவார்கள். ஆனால் ஆளுங்கட்சி சபாநாயகர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வருவதால் இதில் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. பல இடங்களில் விபத்து நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டிற்கு முதல்வர் சென்றிருக்கிறார். ஆனால் முதல்வர் இங்கு வராமல் இருப்பது நெல்லை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என வேதனை அளிக்கிறது. எனவே இந்த விசயத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாக வந்து விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




கல்குவாரி விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகள், கம்யூனிஸ்ட்கள், திராவிடர் கழகத்தோடு சேர்ந்து வன்முறைக்கான களத்தை அமைக்கின்றனர். எனவே என்ஐஏ நடவடிக்கை தொடர வேண்டும். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதரவோடு ஆட்சிக்கு வந்திருப்பதால் திமுக அரசு இதை கண்டு கொள்வதில்லை. விடுதலை சிறுத்தைகள் மேடையில் இந்து தெய்வங்களை அவமதிக்கின்றனர். கன்னியாகுமரியில் உலக புகழ் பெற்ற குமார கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திமுக அரசு இதில் எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்றால் மரபுகளை மீறி கிறிஸ்தவரான அமைச்சர் மனோ தங்கராஜை வைத்து தேர் இழுக்கின்றனர். இது ஒரு அராஜகம். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது. தென் மாவட்டடங்களில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்வதில்லை, எனவே தென்மாவட்டங்களில் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில் பாதுகாப்பு மாநாடு ஏற்படுத்த மாநாடு நடத்த இருக்கிறோம். தமிழகத்தை இரண்டாக பிரித்து தென்மாவட்டங்கள் அடங்கிய தனி மாநிலம் உருவாக்க வேண்டும்” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சி தமிழகத்தை பின்தங்கி கொண்டு சென்று விட்டது. பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. 2024 தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அதிக இடங்களில் வெற்றி பெறும். 2026 இல் பாஜகவோடு இணைந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். விழிஞம் துறைமுக திட்டம் நிறைவேற கூடாது. மீனவர்களுக்கு நல்லது நடக்க கூடாது என்பதில் கிறிஸ்தவ மிஷினரிகள் தெளிவாக செயல்படுகிறார்கள். மதமாற்றம் செய்வதற்காக தென்மாவட்டங்களை வளர விடாமல் கிறிஸ்தவ மிஷினரிகள் செயல்படுகிறது. இதற்கு திமுக ஆதரவாக உள்ளது. செய்தியாளர்களை சந்திக்க பிரதமருக்கு நேரம் கிடையாது எட்டு ஆண்டுகளில் என்ன வளர்ச்சி என்பது தான் பிரதமரின் சாதனையாக இருக்கும். எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை தலைநிமிர செய்துள்ளார். அதனால் அவர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நயன்தாராவுக்கு எனது வாழ்த்துகள். திருப்பதி கோயில் விவகாரத்தில் நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார். சீமான் ஒரு காலத்தில் ஈவெரா கொள்கையை பேசிக்கொண்டிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார். முதலில் திராவிடம் பேசினார். ஈவெரா பெரியாரிசம் பேசினார். அதன்பின் நாம் தமிழர் என ஆரம்பித்து ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு, அதன்பின் முருகன் தான் முப்பாட்டன் என சொன்னார்.




பின்னர் சிவனை ஏற்று கொண்டார். பின்னர் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவையும் சீமான் ஏற்றுக் கொள்வார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்துமக்கள் கட்சியில் வந்து கலந்து கொள்வார்” என விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறது. டாஸ்மாக் மூடுதல், மின் கட்டணம் குறைவு உள்பட எந்த வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை. விரைவில் திமுக ஆட்சியை மாற்றி அமைப்போம். திமுக ஆட்சியில் திமுக காரர்களே பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் திமுக மீது அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளனர். 2024 தேர்தலுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் சூழல் உள்ளது. ஏனென்றால் முழுக்க முழுக்க பிரிவினைவாதிகளே, வன்முறையாளர்களே, பிரதமரை படுகொலை செய்யக்கூடியவர்களையெல்லாம் ஆதரிக்கக்கூடிய ஒரு அமைப்பாக தான் இன்று ஆளுங்கட்சியின் கட்டமைப்பு இருக்கிறது என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண