கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள நாக்கால்மடம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி மையம் திடீரென செயல்பட துவங்கி உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே நாங்குநேரி பகுதியில் டோல்கேட் இருக்கும் நிலையில் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலான நான்குவழிச் சாலை பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் முதல் சோதனை அடிப்படையில் வாகன போக்குவரத்து தொடங்கியது. இச்சாலையில் நாகர்கோவில் அருகே நாக்கால்மடம் பகுதியில் வாகன கட்டண வசூல்மையம் அமைந்துள்ளது . இவ்வழியாக செல்லும் கார், ஜீப், வேன் போன்ற, இலகுரக வாகனம், மற்றும் மினி பஸ், பஸ், டிரக், போன்ற கனரக வாகனங்கள், என அனைத்து ரக வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-2023-ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் .315 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வாகன கட்டண வசூல் மையம் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மின் இணைப்பு வழங்கப்படாததால் திறக்கப்படவில்லை, இந்நிலையில் வாகன கட்டண வசூல் மையத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில் மாலை முதல் கட்டண வசூல் மையம் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது. இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே நாங்குநேரி பகுதியில் டோல்கேட் இருக்கும் நிலையில் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.