கொல்லங்கோடு அருள்குன்று பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். மகள் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். தங்கம் கடந்த 2-ந்தேதி நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக களியக்காவிளையிலிருந்து பஸ்ஸில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் தங்கத்திடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கத்திடம் குடும்ப விவரங்களை கேட்டு அறிந்தார். உடனே அந்த பெண் தங்களது மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

நான் களியக்காவிளைக்கு வரும் போது தோஷத்தை சரி செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து தங்கத்தின் செல்போன் எண்ணை பெண் வாங்கிக் கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய பெண் தான் களியக்காவிளைக்கு வந்திருப்பதாகவும் உங்களது வீட்டின் முகவரியை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். உடனே தங்கம் களியக்காவிளைக்கு சென்று அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பரிகார பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். வீட்டில் அவரது மகளும் இருந்துள்ளார். மகளும், தங்கமும் பரிகார பூஜையில் இருந்தனர். அப்போது அவர்களை வீட்டிலிருந்து நகை அனைத்தையும் ஒரு துணியில் கட்டி கொண்டு வருமாறு அந்த பெண் தெரிவித்தார்.

 

உடனே அவர்கள் வீட்டில் இருந்து 30 பவுன் நகையை துணி ஒன்றில் கட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். பின்னர் வீட்டில் பரிகார பூஜை மேற்கொண்டார். பரிகார பூஜை மேற்கொண்டபோது அந்த பெண் தங்கத்தின் மகளிடம் அவருக்கு பரிகார பூஜைகள் முடிந்து விட்டதாகவும் அவரை வீட்டில் உள்ள அறைக்கு செல்லுமாறும் கூறினார். உடனே அவர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்றார். தங்கத்திடம் காகத்திற்கு உணவு வைத்து விட்டு வருமாறு தெரிவித்தார். உடனே தங்கமும் காகத்திற்கு உணவு அளிப்பதற்காக வெளியே சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதன் பிறகு அந்த பெண் பூஜையில் வைத்து இருந்த நகைகளை உடனடியாக திறந்து பார்க்க கூடாது. மாலையில் தான் பார்க்க வேண்டும் அந்த நகைகளை அலமாரியில் கொண்டு வைக்குமாறு கூறினார். உடனே தங்கமும் அந்த நகைகளை வீட்டின் அலமாரியில் கொண்டு வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை ஆட்டோ ஒன்றில் ஏற்றி தங்கம் வழிஅனுப்பி வைத்தார்.

 

மாலையில் அலமாரியை திறந்து நகையை பார்த்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தங்கம் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் தங்க நகைகளை மாற்றிவிட்டு அந்த பெண் கவரிங் நகைகளை வைத்துள்ளார். திட்டமிட்டு இந்த கொள்ளையில் அந்த பெண் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். நடைக்காவு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் முககவசம் அணிந்து கொண்டு குடையை பிடித்தவாறு செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. எனவே அவரை அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து போலீசார் தங்கத்திடம் அந்த பெண்ணின் அடையாளங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 30 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.