கன்னியாகுமரி ஹைகிறவுண்ட் பகுதியை சார்ந்தவர் சகாய வினோ. இவர் கன்னியாகுமரி வடக்கு தெருவை சார்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் என்பவரது விசைபடகில், டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரையில் விசைபடகில் பணிபுரியும் வேலை ஆட்கள் மற்றும் டிரைவருக்கு படகின் உரிமையாளர்கள் முன்பணம் அளித்து தங்களது படகில் பணி வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும் போது படகில் வைத்து நிலைதடுமாறி விழுந்ததில் சகாய விநோவிற்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிட்சை எடுத்து தொடர்ந்து இன்பத்தின் படகில் கடலுக்கு ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார்.
படகில் வைத்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சகாய வினோவின் முதுகு தண்டு மேலும் பலவீனமடைந்த காரணத்தால் மேல் சிகிச்சை செய்யும் பொருட்டு அவர் கடந்த 2 வாரங்களாக இன்பத்திடம் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த இன்பம் தான் வழங்கிய முன் பணத்தை கேட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சகாய வினோவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது சகாயவினோ மற்றும் அவரது மனைவி லின்சியை திமுக பிரமுகர் இன்பம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கூறி தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த சகாயவினோ ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்பம் கன்னியாகுமரி பகுதியில் முக்கிய தி.மு.க. புள்ளி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தன்னை மிரட்டுவதாகவும் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.