கேரள மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற 111.2 அடி உயர சிவலிங்கம் கொண்ட செங்கல் சிவ பார்வதி கோவில் மேலும் அமெரிக்கா நாட்டின் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அவார்ட் பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழை அமெரிக்கா நாட்டு உலக சாதனை அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் நேரில் வழங்கி சிறப்பித்துள்ளார்.

 

குமரி கேரள எல்லை பகுதியான செங்கல் சிவ பார்வதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுவாமி மகேஷ்வரானந்த சரஸ்வதி நிர்வாகித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தின் வாயு மூலையில் 111.2 அடி உயரமும் 111 அடி சுற்றளவும் கொண்ட மஹாசிவலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி சங்கமத்தில் உள்ள புண்ணிய தீர்த்தம் பாரதத்தின் புண்ணிய இடங்களில் உள்ள மண், பஞ்ச்லோகங்கள், நவதானியங்கள், நவபாஷணங்கள் கொண்டு நிர்மாணிக்கபட்டது.

 

இந்த சிவலிங்கத்தின் உட்பக்கமாக 8 தளங்களை கொண்டுள்ளது. இதில் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து தீர்த்தம் எடுக்கும் சொரூபங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 



 

இது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை பிரம்மிக்க வைக்கிறது. தொடர்ந்து எட்டாவது நிலையில் சில பார்வதியின் கைலாச தரிசனம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து உள்ள தளங்களுக்கு செல்லும் வழிகளில் முனிவர்கள் தவம் செய்வது போன்றுள்ளது.

 

இந்த சிவலிங்கத்திற்கு ஏற்கனவே புக் ஆஃப் ரெக்கார்ட், ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது இதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து உலக நாடுகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து சிவலிங்கத்தை தரிசித்து சென்று வரும் நிலையில், அமெரிக்கா நாட்டின் வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பிற்கு சமர்ப்பித்த நிலையில், இன்று அந்த அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் உட்பட நிர்வாகிகள் நேரடியாக கோவிலுக்கு வந்து வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் சான்றிதழ் புத்தகத்தை கோவில் நிர்வாகி சுவாமி மகேஷ்வரானந்த சரஸ்வதியிடம் வழங்கினர்.

 

இதற்கான விழா ஆலய வளாகத்தில் வைத்து நடந்தது. இதில் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் துறவிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.