தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணிகள் தீவீர படுத்தபட்டு உள்ளது என்றும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் இல்லை என்றும் அனைவரும் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் இன்புளுயன்சா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை இந்த வைரஸ் பரவலை தடுக்க பல வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டம் தோறும் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நோய் கண்டறிய வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நோயின் பரவல் தன்மை குறித்து நன்கு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாகர்கோவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நோயின் பரவல் அதிகமாக இந்த மாவட்டத்தில் இல்லை என உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். மேலும்,டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.