நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு சிறுத்தை, புலி, கரடி, யானை, செந்நாய், கடமான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 30-ந் தேதி களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஆனைகல்விளை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தலைமையில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வன சரகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட 180 பேர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீ பற்றிய பகுதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். அங்கு தண்ணீர் வசதி இல்லை. இதனால் தீ அணைப்பு குழுவினர் மரக்கொப்புகளை வைத்து அடித்தும், கற்கள் மண்ணை அள்ளி போட்டும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கட்டுக்குள் வராமல் பரவிய வண்ணம் இருந்தது. ஆனைகல் விளை பகுதியில் பற்றிய தீயானது, மாவடி பொத்தை, கொசவத்தி வலை வழியாக சக்கதேவி பொடவு வரை பரவி 3 நாட்களாக கொளுந்து விட்டு எரிந்தது.
தீ பற்றிய பகுதிக்கு 10 கிலோமீட்டர் நடந்து மட்டுமே செல்ல முடியும். தீயை அணைக்க நவீன கருவிகளும் இல்லை என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனினும் தீயணைப்பு குழுவினரின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த காட்டுத் தீ நேற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அணைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு கூறுகையில், ‘காட்டு தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மர்ம நபர்களால் ஏற்பட்டுள்ளது.
வனக்குற்றங்களில் ஈடுபட்டு, வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
தீ வைத்தவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.