வேகமெடுக்கிறதா சிபிசிஐடி விசாரணை?
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமார் உடல் கைப்பற்றப்பட்ட கரைசுத்துபுதூரில் நேரில் சென்று பல கட்ட ஆய்வுகளை நடத்தினர். மேலும் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
சிபிசிஐடி முக்கிய அதிகாரிகள் நெல்லையில் முகாம்:
குறிப்பாக சம்பவம் நடந்த அன்று கரைசுத்துபுதூரில் குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக யார் யார் செல்போன் டவர் காட்டியது என அந்த எண்களை ஆய்வு செய்து விசாரணை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் சிபிசிஐடி முத்தரசி இன்று நெல்லைக்கு வந்தார். தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியான ஆய்வாளர் உலக ராணி உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் மற்றும் ஐஜி அன்பு ஆகியோரும் இன்று ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரிக்க நெல்லை வர உள்ளனர். ஏடிஜிபி, ஐஜி, எஸ்பி என மூன்று பேரும் ஒரே நாளில் நெல்லையில் முகாமிடுகின்றனர். மேலும் ஜெயக்குமார் உடல் எடுக்கப்பட்ட கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஏடிஜிபி உட்பட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் 10 தனி படைகள் அமைத்து விசாரித்தும் துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் ஒரே நாளில் முகாமிட்டு இருப்பதால் ஜெயக்குமார் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வேகமெடுக்கும் வழக்கு விசாரணையானது விரைவில் முடிவுக்கு வருமா என்ற கேள்வியுடன் பொதுமக்கள், கட்சியினர் என பலரும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமார் மரண வழக்கு:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே மாதம் 2ம் தேதி இரவில் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் அவரை காணவில்லை என அவரது மகன் மறுநாள் 03.05.24 அன்று உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மே 4ம் தேதி ஜெயக்குமாரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக ஜெயக்குமார் உடல் மீட்க்கப்பட்டது. அன்று மாலையே உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டது. 5ம் தேதி ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரான கரை சுத்துபுதூரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து நெல்லை மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உட்பட 35க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜெயக்குமாரின் உறவினர்கள், மகன்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் இறுதியாக கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கிய வீடியோ, மேலும் கிடைக்கப்பெற்ற பல்வேறு தடயங்களை என அனைத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் எந்த வித துப்பும் துலங்காத நிலையில் தற்போது சிபிசிடிஐ இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.