விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், பட்டுப்பூச்சி, மகாராஜபுரம், தம்பிபட்டி, சேதுநாராயனபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. இங்குள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை விவசாயத்தை நம்பியே தங்களின் குடும்ப வாழ்வாரத்தை நடத்தி வருகின்றனர்.


பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம்:


நீண்ட கால பயிரான தென்னை விவசாயம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இத்தென்னையிலிருந்து 2 மாதத்திற்கு ஒரு முறை தேங்காய் வெட்டி அதனை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் வாடல் நோய் என்ற நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  



இந்த நோயின் காரணமாக தென்னை மர குலைகள் முதல் குருத்து வரை பாதித்து மரங்கள் காய்ப்பு திறன் இன்றி காணப்படுகிறது. இதனால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.


காப்பாற்றுங்கள்:


இது குறித்து மகாராஜபுரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமராஜ் என்பவர் கூறும் பொழுது, வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை  விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது தஞ்சாவூர் வாடல் நோய் காரணமாக தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால்  தென்னை குலைகள்  கருப்பு நிறத்தில் பூஞ்சை போன்று மாறி  பின்பு பச்சை நிறத்தில் இருக்கும் தென்னை கிளை சாம்பல் நிறத்தில் மாறி  அனைத்து குலைகளும் மரத்திலிருந்து விழுந்து விடுகிறது. மேலும் தேங்காய், இளநீர் என அனைத்து இந்த நோய் தாக்குதலால் தானாகவே கீழே விழுகிறது. அது மட்டும் அல்லாது இதே போல் தொடர்ந்து நீடித்தால் தென்னை மரங்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்தார். உடனடியாக வேளாண்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


”பெத்த பிள்ளை கைவிட்டாலும் தென்னை வாழ வைக்கும் என்பது பழமொழி” இந்த பழமொழிக்கேற்ப சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வாழ வைத்து வரும் தென்னை மரங்கள் தங்கள் கண்முன்னே நோய் பாதிப்பிற்கு ஆளாகி காப்பாற்ற முடியாத சூழலுக்கு சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், டிரோன்  உள்ளிட்ட கருவிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை இணைந்து மருந்து தெளித்து எங்களை வாழ வைக்கும் தென்னையை காப்பாற்ற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.