நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே மாதம் 2ம் தேதி இரவில் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் அவரை காணவில்லை என அவரது மகன் மறுநாள் 03.05.24 அன்று உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மே 4ம் தேதி ஜெயக்குமாரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக ஜெயக்குமார் உடல் மீட்க்கப்பட்டது. அன்று மாலையே உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டது. 5ம் தேதி ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரான கரை சுத்துபுதூரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 10 DSP க்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து  நெல்லை மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உட்பட 35க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜெயக்குமாரின் உறவினர்கள், மகன்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் இறுதியாக கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கிய வீடியோ, மேலும் கிடைக்கப்பெற்ற பல்வேறு தடயங்களை என அனைத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 


இருப்பினும் தற்போது வரை துப்பு துலங்காத நிலையில் காவல்துறையினர் அடுத்தடுத்த நகர்வுகளில் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையை துவக்கிய காவல்துறையினர் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்களையும், விடை தெரியாத கேள்விகளையும் வைத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.. இருப்பினும் 19 நாட்களைக் கடந்த பின்னரும் இதுவரை கொலையா? தற்கொலையா? என விசாரணையை நடத்தி வந்த நிலையில் தற்போது வரை வழக்கை சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் இதுவரை யாரும்  கைது செய்யப்படவில்லை.. காவல்துறையினருக்கு இந்த சம்பவம் பெரும் சவலாக இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அதிகாரியாக  Cbcid காவல் ஆய்வாளர் உலகராணி நியமனம்  செய்யப்பட்டார். 


இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரணம் தொடர்பான கோப்புகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட Cbcid காவல் ஆய்வாளர் உலகராணி இன்று  சிபிசிஐடி அலுவலகத்தில் 02/2024 என FIR பதிவு செய்து உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஜெயக்குமார் உடல் கிடைக்கப்பெற்ற அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள இடத்தில் நேரடியாக சென்று விசாரணை தொடங்கி உள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில்  ஜெயக்குமார் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை சிபிசிஐடி காவல்துறையினர் அவிழ்ப்பார்களா? உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர், உறவினர்கள்,மக்கள் என பலரும்  உள்ளனர்.