தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, நீலாம்பூர், ஆனைமலை என மொத்தம் நான்கு யானைகள் காப்பகம் உள்ளன. இதனைத் தொடர்ந்து  தமிழ்நாட்டில் 5 வது யானைகள் காப்பகமாக கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தன்று நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை அறிவித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற அகத்திய மலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2761 யானைகள் இருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள 11,947 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகள் சரணாலயமாக அறிவித்த நிலையில் இன்று முதல் அகத்திய மலைப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 


அதன்படி அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 23 ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தலைமையில் கடந்த திங்கள்கிழமையன்று அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்களுக்கு முண்டந்துறை பயிற்சி கூட்டரங்கில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணியை இன்று தொடங்கினர்.


பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள் முண்டந்துறை பகுதியில் 15 பிரிவுகளாகவும், பாபநாசம் பகுதியில் 4 பிரிவுகளாகவும், கடையம் பகுதியில் 9 பிரிவுகளாகவும்ம், அம்பாசமுத்திரம் பகுதியில் 9 பிரிவுகளாகவும் என மொத்தம் 37 குழுவினர் என 90 க்கும் மேற்பட்டோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.. கணக்கெடுப்பை பொறுத்தவரை மூன்று நாட்களும் மூன்று வகைகளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தெரிவித்தார், இது குறித்து  அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது,


* முதல் நாள் முழுவதும் யானைகள் சரணாலயம் முழுவதும் நேரடியாக யானைகளைக் கண்டு அதன் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.


* இரண்டாவது நாள் 37 குழுவிலும் அவரவர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஒரு வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் வரும் யானைகளின் சாணம், எச்சம், என யானையின் பழக்க வழக்கங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கணக்கெடுக்கப்படும்.


* மூன்றாவது நாள் முழுவதும் யானை அதிகம் பயன்படுத்தும் நீர் நிலைகளை கண்டறிந்து அதற்குள் வரும் யானைகளை கணக்கெடுப்பது என தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெறுகிறது என்றார். மேலும்  தமிழகத்திற்கு முதுமலை காப்பகத்தின் அதிகாரி இதற்கு கண்காணிப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தமிழகத்தில் நடைபெறும் யானைகள் கணக்கெடுப்பு முழுவதும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதுமாக கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்