நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 2 ஆம் தேதி இரவு காணாமல் போன  நிலையில் மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிபிசிஐடி வசம் இவ்வழக்கானது மாறியது. அதன்பின் சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமார் மனைவி, மகன்கள் உள்பட குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சில வாரங்களுக்கு முன்பு நெல்லை வருகை தந்து கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஆய்வு நடத்தி வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் ஜெயக்குமார் மரணத்தின் பின்னணி பெரும் ரகசியமாகவே இருந்து வருகிறது.


இந்நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் ஐஜி அன்பு எஸ்பி முத்தரசி ஆகிய மூன்று பேரும் நேற்று ஒரே நாளில் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கிடந்த குழிக்குள் போலீசார் இறங்கி அளவீடு செய்தனர். பின் தோட்டம் முழுவதும் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் அங்குள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் ஆய்வு செய்ததை தொடர்ந்து ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். ஜெயக்குமாரின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த  நிலையில் நேற்றைய விசாரணையை முடித்த அவர்கள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஐஜி உள்பட சிபிசிஐடி உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு ஜெயக்குமார் வழக்கின் விசாரணை அதிகாரி உலகராணி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்குமூலம் கடிதத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில் தற்போது முதல் நபராக இடம் பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜாவை சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்தராஜா தனது விளக்கத்தை கடிதமாக அளித்துள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் இன்று ஆனத்தராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் வழக்கில் உயரதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் மரண வாக்கு மூலம் கடிதத்தில் இடம் பெற்ற நபரிடம் நடைபெற்று வரும் தொடர் விசாரணை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள கேவி.தங்கபாலு, ரூபி மனோகரன், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.