நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரை சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமார் மாயமான வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் அவரது வீட்டுக்கு பின்பு உள்ள தோட்டத்தில் 4 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பத்துக்கு மேற்பட்ட தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இவ்வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி அதிகாரிகள், ஜெயக்குமார் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் விசாரணை செய்தனர். மேலும் அவரது மகன்கள், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமும் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றது. அதேபோல கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடயவியல் அதிகாரிகள், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்யும் டம்ப் டவர் கருவி , உள்பட பல்வேறு வகைகளில் விஞ்ஞானபூர்வமாக தடயங்களை தேடி ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இன்று அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என முப்பதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைகளில் நீண்ட கம்புகளை கொண்டு குப்பைகள், செடிகள் போன்ற பல்வேறு இடங்களில் கிளரி ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு செய்தனர்.. இதில் பத்துக்கு மேற்பட்ட பெண் அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட ஆண் அதிகாரிகள் என முப்பதுக்கு மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தடயங்களைத் தேடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.. ஜெயக்குமார் மரணமடைந்து 65 நாட்களாகியும் இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளின் இன்றைய சோதனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கள் கிழமையன்று நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறந்து 60 நாட்கள் ஆகின்றது. இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அதன் பின்புலம் என்ன என்பது குறித்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி எந்த தகவலும் தற்போது வரை இல்லை. ஒரு வேளை இந்த வழக்கு பின் தங்கி செல்கிறதா என்பது போல் தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது. அரசும், முதல்வரும் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம். இருப்பினும் காலதாமதாகிவிட்டது. நாங்கள் மட்டுமின்றி மக்களும் இந்த வழக்கு குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.