நெல்லை மேயராக இருந்த திமுகவை சேர்ந்த சரவணன் ராஜினமா செய்த நிலையில், அடுத்து யார் திருநெல்வேலி மேயராக நியமிக்கப்பட போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


55 வார்டுகள் உள்ள நெல்லை


நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில் அந்த வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக  மாமன்ற உறுப்பினர்களே உள்ளனர். மேலும் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த  உறுப்பினர்கள் 7 பேரும் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்த நிலையில் நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் மேயருக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே நடந்த  பணிப்போர் காரணமாக தற்போது நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமை அறிவுறுத்தியதன் பேரில் அவர் ராஜினாமா செய்ததாக சொல்லப்படும் நிலையில், இந்த ராஜினாமா கடிதம் வரும் திங்கள் கிழமை 08.07.24 அன்று கூடும் மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு ஏற்றுக் கொண்டதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். அன்று முதல் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேயராக துணை மேயராக பொறுப்பில் இருப்பார்.


பொறுப்பில் வகித்த மேயர்கள்:


1996 இல் திருநெல்வேலி மாநகராட்சிக்கு முதலில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பட்டியலின பெண்களுக்காக இந்த மாநகராட்சி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பட்டியலின பெண் மேயர்கள் இருந்த நிலையில் 96 முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுகவின் உமாமகேஸ்வரியும், 2001 முதல் 2006 வரை அதிமுகவின்  ஜெயராணியும் மேயராக இருந்தனர். அதன் பின்னர் மேயர் பதவி பொது பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னர் 2006 முதல் 2011 வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த திமுகவின் ஏ.எல். சுப்பிரமணியன் மேயராக பதவி விகித்தார்.


2011 ஆம் ஆண்டு அதே சமூகத்தைச் சார்ந்த அதிமுகவில் இருந்த விஜிலா சத்யானந்த் மேயராக வெற்றி பெற்றார். ஆனால்  2013 ஆம் ஆண்டு அவர் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் புவனேஸ்வரி மேயராக இருந்தார். அவரும் வெள்ளாளர் சமூகத்தை சார்ந்தவரே. 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில் 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் சரவணன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..


யாருக்கு வாய்ப்பு?


திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரை வெள்ளாளர் சமூக மக்கள் அதிக அளவில்  வசிக்கின்றனர். அதனால் அதே சமூகத்தை சேர்ந்தவர்களே இதுவரை பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போதும் அவர்களுக்கே கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.



  •  குறிப்பாக 25 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கும் ராமகிருஷ்ணன் என்ற  கிட்டுவிற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் 1980 ஆம் ஆண்டு முதல் திமுகவின் உறுப்பினராக உள்ள நிலையில் இரண்டாவது முறையாக மாமன்ற உறுப்பினராக உள்ளார். ஐந்து முறை வட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். எளிமையான நபரான இவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவராக உள்ளார்.



  • அதே போல  மற்றொரு நபரான  27 வது வார்டு மாமன் உறுப்பினராக உள்ள எஸ். உலகநாதன் என்பவருக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் முதன்முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வட்டக் கழக செயலாளராகவும், திருநெல்வேலி பகுதி கழக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • இவர்களை தவிர இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ள ராஜு தற்போது துணை மேயராக உள்ளார்.  தற்போது இவர் பொறுப்பு மேயராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே நிலை தொடரவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2013 ஆம் ஆண்டு விஜிலா சத்யானந்த் மாநிலங்களை உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பிறகு ஆறு மாதத்திற்கு புதிய மேயர்  தேர்தல் நடத்தப்படவில்லை, அப்போது துணை நேராக இருந்த ஜெகன்நாதனே  மேயர் பொறுப்பை கவனித்து வந்தார்



  • அதே போல பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுகவின் நிரந்தர வாக்கு வழியாக கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.  இவர்கள் தவிர  கட்சி தலைமை புதிய மேயர் வேட்பாளரை அறிவிக்குமா என்பது குறித்தும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திருநெல்வேலி நகராட்சியாக இருந்த காலத்திலேயே உறுப்பினர்களாக இருந்தவர்களே தற்போது மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அப்படியென்றால் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த கந்தன் நகராட்சியாக இருந்த போது இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார். மாநகராட்சி ஆன பிறகு தற்போதும்   உறுப்பினராக உள்ளார். அதனால் அவரது பெயரும் பரிசீலிக்கப்படலாம். அதே போல  தொடர்ந்து ஐந்தாவது முறை மாமன்ற உறுப்பினராக உள்ள 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  பிரான்சிஸ் ன் பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 


துணை மேயருக்கே அதிக  வாய்ப்பு:


இதற்கிடையே கடந்த மூன்று வருடங்களாக துணை மேயராக இருக்கும் யாதவர் சமூகத்தை சேர்ந்த கே ஆர் ராஜு நேரடியாக அறிவிக்கப்படாலம் எனவும் அவ்வாறு அவர் அறிவிக்கப்பட்டால் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அல்லது உலகநாதன் ஆகிய இருவரில் ஒருவர் துணை மேயராக நியமிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் திமுக தலைமையிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது துணை மேயராகவும் பொறுப்பு மேயராகவும் இருக்கும் கே ஆர் ராஜு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே மேயர் பதவிக்கு அப்துல் வகாப்பின் தீவிர ஆதரவாளரும், தற்பொழுது பொறுப்பு மேயராக இருக்க கூடிய கே.ஆர் ராஜு மேயராக  அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவே சொல்லப்படுகிறது..