தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த கடல் வழியாக அந்நிய சக்திகள் ஊடுறுவாமல் தடுப்பதற்காக கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு, கடற்கரையோரங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதே போன்று கடலோர காவல்படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் கிழக்கே அமைந்து உள்ள இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், தமிழக கடற்கரையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்து உள்ளது. ஒருகாலத்தில் பாதுகாப்பான இடமாக கண்டறியப்பட்ட தென்மாவட்டங்களில், நாட்டின் முக்கியமான உற்பத்தி கேந்திரங்களான, அணுசக்தி துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், கனநீர் ஆலை, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தென்தமிழகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியை பாதுகாப்பதற்கு வசதியாக கடற்படை, கடலோர காவல்படை ரோந்து அதிகரிக்கப்படுகிறது. கடற்கரையோரமாக நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை விமானங்கள் இறங்கும் வகையில் பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முப்படைகளின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி, ராமநாதபுரத்தை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா பகுதியில் 21 சிறிய தீவுகள் அமைந்து உள்ளன. இந்த தீவுகள் அனைத்தும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. சமீபகாலமாக இலங்கையில் இருந்து அகதிகள் ராமேசுவரம் பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் ஆங்காங்கே தீவுப்பகுதிகளில் இறக்கி விடப்படகின்றனர். அதன்பிறகு போலீசார் மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். இதனால் தீவு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், அனைத்து தீவுகளிலும் சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் தலைமையில், ஆய்வாளர் சைரஸ், கடலோர காவல்படை அதிகாரிகள் மிசாகா, பிரமோத் அப்புகுட்டன், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ஜினோபிளசில், வன காப்பாளர் மதன்குமார் மற்றும் போலீசார் திடீர் ரோந்து மேற்கொண்டனர். அவர்கள் 3 படகுகளில் தீவுகளுக்கு சென்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான்தீவு, காரைச்சல்லி தீவு, காசுவாரி தீவு ஆகிய தீவுகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த தீவு பகுதிகளில் ஏதேனும் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதா?, தீவு பகுதியில் உள்ள புதர்களின் மறைவில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்தனர். தீவு பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். தொடர்ந்து போலீசார் கடற்கரையோர கண்காணிப்பு பணிகளை அதிகரித்து உள்ளனர்.